பல்லடம்,:பல்லடம் அருகே மயான நிலத்தை ஆக்கிரமித்த தி.மு.க.,வினர், வாழை மரம், மாவிலை தோரணம் கட்டி கட்சி அலுவலகம் திறந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே மாதப்பூர் கிராமத்தில், 4 ஏக்கருக்கு மேல் மயான நிலம் உள்ளது. இதில், எந்தவித அனுமதியும் பெறாமல், தி.மு.க., கட்சி அலுவலகம் நேற்று திறக்கப்பட்டதாக புகார் எழுந்துஉள்ளது. மயான நிலத்தை சமன் செய்து, 'சிமென்ட் ஷீட்' வேய்ந்த 'ஷெட்' அமைக்கப்பட்டது. வாழை மரம், மாவிலை தோரணங்களுடன் கட்சிக்கொடிகள் கட்டப்பட்டன.
அலுவலகத்துக்குள் முன்னாள் முதல்வர் கருணாநிதி படத்துக்கு மாலை அணிவித்து, தேங்காய் பழம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. அந்த இடம் மயான புறம்போக்கு இடம் என்று தெரிந்தும், அங்கு அத்துமீறி கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.
திறப்பு விழாவில் பங்கேற்ற பொங்கலுார் ஒன்றிய சேர்மன் குமாரிடம் கேட்டதற்கு, ''கிளை செயலர் கிட்டுசாமி, 10 ஆண்டுக்கும் மேலாக இந்த இடத்தில் ஓட்டு கட்டடம் அமைத்திருந்தார். தற்போது, இதை சிமென்ட் ஷீட் கட்டடமாக மாற்றி, டீக்கடை அமைப்பதாக கூறினார்.
''அவர் அழைப்பின் படி பூஜையில் பங்கேற்றேன். மற்றபடி இது கட்சி அலுவலகம் கிடையாது. இது மயான பூமியா, இல்லையா என்பதை வருவாய் துறையினர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பது அவர்களின் கடமை,'' என்றார்.
தாசில்தார் நந்தகோபாலிடம் கேட்டபோது, ''ஷெட் அமைந்துள்ள பகுதி மயான பூமி என ஆவணங்களில் உள்ளது. ஆக்கிரமிப்பு கட்டடம் என்ற அடிப்படையில் அவர்களே அகற்றிக்கொள்ள முறையாக 'நோட்டீஸ்' வழங்கப்படும். காலக்கெடுவுக்குள் அகற்றாவிட்டால் நாங்களே அகற்றுவோம்,'' என்றார்.