குளித்தலை:குளித்தலை அருகே, ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டு போட்டியில், காளை முட்டியதில் வலது கண் பகுதியில் பலத்த காயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
கரூர் மாவட்டம், குளித்தலையை அடுத்த, ஆர்.டி.மலையில் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று முன்தினம் நடந்தது. இதில், 756 காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன; 362 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
இப்போட்டியில், வடசேரி பஞ்., பள்ளப்பட்டியை சேர்ந்த பழனிசாமி மகன் சிவக்குமார், 21, முதல் சுற்றில் இரண்டு காளைகளை அடக்கி, இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தார்.
இரண்டாவது சுற்று நிறைவு பெறும் நேரத்தில், உடல் சோர்வு காரணமாக, தடுப்பு கம்பி வேலியோரம் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, வாடிவாசல் வழியே அவிழ்த்து விடப்பட்ட காளை ஒன்று, சிவக்குமாரை முட்டியதில், அவருக்கு வலது கண் பார்வை முற்றிலும் பறிபோய், படுகாயமடைந்தார்.இதையடுத்து, தற்காலிக மருத்துவ முகாமில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த சிவக்குமார், நேற்று அதிகாலை உயிரிழந்தார். பலியான மாடுபிடி வீரர், மெக்கானிக் தொழில் செய்து வந்தார். இவர் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், உயிரிழந்த இளைஞரின் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.