சோழிங்கநல்லுார், சோழிங்கநல்லுார் மண்டலத்தில், கொசு ஒழிப்பு மருந்து முறையாக வழங்காததால், கொசுத்தொல்லை அதிகரித்துள்ளதாக கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர்.
சோழிங்கநல்லுார் மண்டலக்குழு கூட்டம், மண்டல தலைவர் மதியழகன் தலைமையில் நடந்தது.
இதில், கவுன்சிலர்கள் மற்றும் ராஜசேகர், பத்மநாபன் உள்ளிட்ட மண்டல அதிகாரிகள் பங்கேற்றனர். வரி வசூலிப்பாளர்கள், மாநகராட்சி அனுமதி இல்லாமல் வெளி நபர்களை உதவியாளராக வைக்கக் கூடாது. ஓ.எம்.ஆர்., அணுகு சாலையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகள், வாகனங்களை அகற்ற வேண்டும் என, கவுன்சிலர்கள் பேசினர்.
மேலும், வரி மதிப்பீடு பெயர் பதிவு செய்வதில் உள்ள குளறுபடியை நீக்க வேண்டும். துரைப்பாக்கம், ஈஞ்சம்பாக்கம், செம்மஞ்சேரியில் சீரான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.
கொசு ஒழிப்புக்கான மருந்து முறையாக வினியோகம் செய்வதில்லை. இதனால், கொசு தொல்லை அதிகரித்துள்ளது, உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து, கவுன்சிலர்கள் பேசினர்.
இதற்கு, அந்தந்த துறை அதிகாரிகள் பதில் அளித்தனர். கூட்டத்தில் சாலை, பூங்கா, கழிப்பறை பராமரிப்பு என, 45 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.