புதுச்சேரி:சேவல் சண்டை நடத்திய இருவருக்கு ஜாமின் கிடைத்த நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட சேவல்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளன.
புதுச்சேரி, தேங்காய்திட்டில் பணம் வைத்து சேவல் சண்டை நடத்துவதாக, 14ம் தேதி முதலியார்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி, சப் - இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் தேங்காய்த்திட்டு பகுதிக்கு விரைந்தனர். அங்கு, அய்யனார் கோவில் பகுதியில் பணம் வைத்து சேவல் சண்டை நடத்திக் கொண்டிருந்த, அதே பகுதி சின்னதம்பி விஸ்வநாதன், 48, மற்றும் பிரதாப் சூர்யபிரதாப், 25, ஆகியோரை கைது செய்தனர்.
சண்டையில் ஈடுபடுத்திய நான்கு சேவல்களையும் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக வழக்கு பதிந்த போலீசார், கைது செய்யப்பட்ட இருவரையும் அன்றைய தினமே ஜாமினில் விடுவித்தனர். ஆனால், பறிமுதல் செய்யப்பட்ட நான்கு சண்டை சேவல்களை போலீசார் விடுவிக்கவில்லை.
இது குறித்து போலீசார் கூறியதாவது:
வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட சேவல்களை கோர்ட்டில் அனுமதி பெற்றே விடுவிக்க முடியும். 14ம் தேதி முதல் 17 வரை தொடர்ச்சியாக நான்கு நாட்கள் கோர்ட் விடுமுறை. சேவல்களை விடுவிக்க, கோர்ட்டில் நேற்று அனுமதி கோரப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் சேவல்கள் விடுவிக்கப்படும்.
இவ்வாறு கூறினர்.