ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் வாலிபரிடம் 'லிப்ட்' கேட்டு பணம் பறித்ததோடு, அவரை நிர்வாண 'வீடியோ' எடுத்து மிரட்டிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இதில் தொடர்புடைய மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், ஆத்மநாதசாமி நகரைச் சேர்ந்த நாகேஸ்வரன் மகன் விஜயகுமார், 25. இவர், ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இரண்டு மாதங்களுக்கு முன் பணியில் சேர்ந்தார்.
கடந்த 14ல், டூ - வீலரில் மாடக்கொட்டான் வழியாக சென்றார். அப்போது, 'லிப்ட்' கேட்டு ஏறியவர் திடீரென கத்தியை காட்டி மிரட்டி, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு இவரை அழைத்துச் சென்றார். அங்கு இருந்தவர்கள் விஜயகுமாரிடம் இருந்த 21 ஆயிரம் ரூபாயை பறித்தனர். பின், அவரை நிர்வாணப்படுத்தி, மொபைல் போனில் வீடியோ எடுத்தனர்.
பணம் பறித்தது குறித்து வெளியே கூறினால் வீடியோவை வெளியிட்டு விடுவதாகவும், கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி தாக்கினர்.
இதனால் பயந்த விஜயகுமார், இரண்டு நாட்களாக யாரிடமும் கூறாமல் மவுனமாக இருந்தார். பின், அவரின் தாயிடம் நடந்தவற்றை கூறினார்.
இது குறித்து, ராமநாதபுரம் கேணிக்கரை போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் ஆடிவேல், எஸ்.ஐ., தினேஷ்குமார் விசாரித்து இச்சம்பவத்தில் தொடர்புடைய, 19 வயது முதல் 27 வயது வரையிலான நான்கு வாலிபர்களை கைது செய்து, மேலும் இருவரை தேடி வருகின்றனர்.