செம்பட்டி:திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி பட்டாசு கடை மாடியில் நடந்த வெடிவிபத்தில் கணவர், மனைவி பலியான நிலையில் சேதமடைந்த கட்டடத்தை பாதுகாப்பு காரணங்களுக்காக முழுமையாக அகற்ற வருவாய்த்துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
செம்பட்டி அருகே வீரக்கல்லை சேர்ந்த ஹிந்து முன்னணி மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயராம் 35, மனைவி ராணி 31, குழந்தைகள் தீபிகா 7, கனிஷ்கா 5, போகன் 4, உடன் செம்பட்டியில் வாடகை கட்டடத்தில் வசித்தார். தரைதளத்தில் பட்டாசு கடை நடத்தியபடி மாடியில் குடியிருந்தனர். நேற்று முன்தினம் குழந்தைகள் வெளியில் விளையாடிக் கொண்டிருந்த போது மாடி கட்டடம் வெடித்து சிதறியது. தீயணைப்புத்துறை, போலீசார் 5 மணி நேரம் போராடி இடிபாடுகளில் சிக்கி இறந்த ஜெயராம், ராணி உடல்களை மீட்டனர்.
ஜெயராமின் தாயார் வசந்தியின் பாதுகாப்பில் குழந்தைகள் உள்ளனர். மீட்பு பணியை பார்வையிட்ட அமைச்சர் ஐ.பெரியசாமி, ஜெயராமின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.
தரைதள பட்டாசு கடையில் இருந்த வெடி பெட்டிகளில் தீயணைப்புத் துறையினர் தண்ணீர் பீய்ச்சி அடித்து அவற்றை செயலிழக்க செய்தனர். விபத்துக்கான காரணத்தை கண்டறிய பட்டாசு மருந்து தடயங்கள் சேகரிப்பு நிபுணர்கள் வரவழைக்கப்பட உள்ளனர்.
பாதுகாப்பிற்காக கட்டடத்தை முழுமையாக அகற்ற வருவாய்த்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தடயவியல் ஆய்வுக்கு பின் இப்பணி நடக்க உள்ளது.