மூணாறு:''கேரளாவில் நடக்கும் நில அளவீடு தொடர்பான டிஜிட்டல் ரீ சர்வேயால் தமிழக எல்லைப்பகுதியில் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாது,'' என, கேரள வருவாய்த்துறை அமைச்சர் ராஜன் தெரிவித்தார்.
மூணாறு ஊராட்சியில் வீட்டுமனை வாங்க நூறு பேருக்கு நிதியுதவி, மேலும் வீட்டுமனை வைத்துள்ள 45 பேருக்கும் லைப் திட்டத்திலும் வீடு கட்ட நிதியுதவி ஆகிய திட்டங்களை அமைச்சர் ராஜன் நேற்று துவக்கி வைத்து பேசியதாவது:
கேரளாவில் டிஜிட்டல் முறையில் ரீசர்வே நடக்கிறது. தற்போது 915 கிராம நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சர்வே பணிகள் முடிக்கப்பட்டன. சர்வேயால் தமிழக எல்லை பகுதிகளில் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாது. சென்னையில் தமிழக வருவாய் துறைஅமைச்சர் உட்பட உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
வட்டவடையில் நீலக் குறிஞ்சி தேசிய பூங்கா அமைப்பது தொடர்பான பிரச்னை குறித்து ஆலோசிப்பதற்கு திருவனந்தபுரத்தில் ஜன.25ல் உயர் மட்ட கூட்டம் நடக்க உள்ளது. இடுக்கி மாவட்டத்தில் விவசாயிகள், மக்கள் பிரதிநிதிகள் கோரிக்கைகளை பரிசீலித்து நிலப் பதிவு சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதற்கான மசோதா வரும் சட்டசபை கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும், என்றார்.
எம்.எல்.ஏ.,க்கள் ராஜா (தேவிகுளம்), வாழூர் சோமன்(பீர்மேடு) உட்பட பலர் பங்கேற்றனர்.