வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: கோவிட் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால், தமிழகத்தில் மாணவர்களின் வாசிக்கும் கற்கும் திறன் குறைந்துள்ளது. இது கல்வி குறித்த வருடாந்திர ஆய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.
மாணவர்களின் வாசிக்கும் மற்றும் கற்கும் திறன் குறித்து கடந்த 2018 ம் ஆண்டு ஆய்வு நடத்தப்பட்டது. அதில், 2ம் வகுப்பு பாடத்தை தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு படிக்கும் மாணவர்க் 10.2 சதவீதம் பேர் சரியாக வாசித்தனர். இது தேசிய அளவில் 27.3 சதவீதமாக இருந்தது.
கோவிட் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு, ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்தன. இதனை தொடர்ந்து பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு, கடந்த ஆண்டு(2022)ல் மாணவர்களின் கல்வி குறித்த வருடாந்திர ஆய்வு நடத்தப்பட்டது.

அதில், தமிழகத்தில் 3ம் வகுப்பு படிக்கும் 4.8 சதவீத மாணவர்களால் மட்டுமே, 2ம் வகுப்பு பாடத்தை வாசிக்க முடிந்தது. இது தேசிய அளவில் 20.5 சதவீதமாக குறைந்துள்ளது. தேசிய அளவில் வாசிக்கும் திறன் குறைவாக உள்ள மாநிலங்களில் தமிழகமும் ஒன்று.
அதேபோல், 3ம் வகுப்பு படிக்கும் 11.2 சதவீத மாணவர்களால் மட்டுமே கழித்தல் குறித்து அறிந்து வைத்துள்ளனர். 5ம் வகுப்பு படிக்கும் 14.9 சதவீத மாணவர்கள் மட்டுமே வகுத்தல் தெரிந்து வைத்துள்ளனர்.
மேலும் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2006 முதல் 2018 வரை , இந்த எண்ணிக்கை 78.3 சதவீதத்தில் இருந்து 67.4 சதவீதமாக குறைந்தது. ஆனால், 2022 ல் 75.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அங்கன்வாடிகளிலும் அதிகளவு மாணவர்கள் சேர்ந்துள்ளனர். ஆரம்ப பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகை ஆண்டிற்கு 90 சதவீதமாக உள்ளது. ஆனால், மாணவர்களின் வருகை பதிவானது 2.3 சதவீதம் குறைந்தது அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.