மப்பேடு:கடம்பத்துார் ஒன்றியம், மப்பேடு ஊராட்சியில், 1996ம் ஆண்டு, தி.மு.க., ஆட்சியில், சமத்துவபுரம் அமைக்கப்பட்டது. தற்போது இங்கு 70 குடும்பங்கள் உள்ளனர்.
இப்பகுதியில், குழந்தைகளுக்காக, விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய சிறுவர் பூங்கா அமைக்கப்பட்டது.
இந்த பூங்கா போதிய பராமரிப்பு இல்லாததால், விளையாட்டு உபகரணங்கள், சேதம்அடைந்து பயன்படுத்த முடியாத நிலையிலும், புதர் மண்டி கிடப்பதால் தற்போது 'குடி'மையமாக மாறிவிட்டது.
கடந்த பொங்கல் தினத்தன்று, தமிழக அரசு உத்தரவுப்படி சமத்துவபுரத்தில் மாவட்ட கலெக்டர் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இந்நிலையில், சிறுவர் பூங்காவில் உள்ள பெரியார் சிலை சீரமைக்கப்பட்ட நிலையில், சிறுவர் பூங்கா சீரமைக்கப்படாதது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம் சமத்துவபுரத்தில் உள்ள சிறுவர் பூங்காவை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.