திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், களாம்பாக்கம் ஊராட்சியில், காலனி பகுதியில் சேகரமாகும் கழிவு நீர் செல்ல, பேரம்பாக்கம் -- திருவாலங்காடு நெடுஞ்சாலையில், கழிவு நீர் கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த கால்வாயை ஒட்டி அதே பகுதியில் வசிக்கும் சிலர் குப்பை, மாட்டுச்சாணத்தை கொட்டி வருகின்றனர். இதனால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீருடன் குப்பை, மாட்டுச்சாணம் கலந்து அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது.
இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளதால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்து உள்ளனர். மேலும், இந்த பகுதியில், குப்பை, மாட்டுச்சாணத்தை கொட்டுவதை தவிர்க்கவும், துர்நாற்றம் ஏற்படுத்தி வரும் கழிவுகளை விரைந்து அகற்றிடவும் ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.