காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் திருக்காலிமேடு சாலியர் தெருவில், அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஆண்டுதோறும் காணும் பொங்கல் தினத்தன்று சிறுவர்- சிறுமியர் மற்றும் பெண்களுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசு வழங்கி வருகின்றனர். அதன்படி, காணும் பொங்கல் தினத்தன்று பொங்கல் விழா போட்டிகள் நடந்தன.
இதில், சிறுவர்களுக்கான யோகா, லெமன் ஸ்பூன், மெதுவாக சைக்கிள் ஓட்டுதல், ஓட்டப்பந்தயம், திருக்குறள் ஒப்புவித்தல், உறியடித்தல், நடனம், பெண்களுக்கான கோலப்போட்டி, 'மியூசிக்கல் சேர்' தனித்திறமையை வெளிப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குப்பு சாமி வெற்றி பெற்றவர்ளுக்கு பரிசு வழங்கினார்.
கோலப்போட்டியில், சமூக வலைதளங்களின் நன்மை, தீமைகள் குறித்து கோலம் வரைந்த சரண்யா, ஆர்த்தி முதல் பரிசு பெற்றனர். 'மியூசிக்கல் சேர்' போட்டியில் உஷா முதல் பரிசு பெற்றார்.
தனித்திறமையை வெளிப்படுத்தும் போட்டியில், எல்.கே.ஜி., மாணவர் சர்வன் ப்ரணவ் 10 திருக்குறளையும், மூன்றாம் வகுப்பு மாணவர் கவ்ஷன் 30 திருக்குறளையும், மேடையில் சரளமாக ஒப்புவித்து சிறப்பு பரிசு பெற்றனர்.