சிறுவர் பூங்கா அமைக்கப்படுமா?
காஞ்சிபுரம் ஒன்றியம், புத்தேரி ஊராட்சிக்குட்பட்ட மிஸ்ரி நகரில், பூங்கா அமைப்பதற்கான பொது இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் சிறுவர் பூங்கா அமைக்க கோரி கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இருப்பினும் பூங்கா அமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், இப்பகுதிவாசிகள் நடைபயிற்சி மேற்கொள்ளவும், சிறுவர்கள் விடுமுறை நாட்களில் விளையாட முடியாத சூழலும் உள்ளது. எனவே, புத்தேரி ஊராட்சி மிஸ்ரி நகரில் உள்ள பொது இடத்தில், சிறுவர் பூங்கா அமைக்க வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆர்.வெங்கடேசன், புத்தேரி.
உணவகங்களில் விலை பட்டியல் விபரம் வைப்பது அவசியம்
காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சுவாமி தரிசனம் செய்ய தினமும் வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணியர் வந்து செல்கின்றனர். இக்கோவில்களின் அருகில் உள்ள பெரும்பாலான உணவகங்களில் உணவுப் பட்டியல் மட்டுமே உள்ளது.
அதில், உணவுப் பண்டங்களில் விலை எவ்வளவு என்பது குறிப்பிடப்படவில்லை. இதனால், வாடிக்கையாளர்கள் சாப்பிட்டு முடித்ததும், ஹோட்டல் ஊழியர்கள் நிர்ணயிப்பதுதான் விலையாக உள்ளது. இதனால், வெளியூர் சுற்றுலாப் பயணியருக்கும், ஹோட்டல் ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்படுகிறது.
எனவே, காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து உணவகங்களிலும், வாடிக்கையாளர்களின் கண்களுக்கு தெரியும் வகையில், உணவுப் பண்டங்களின் விலைப் பட்டியல் விபரம் வைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-டி.மதனகோபால், காஞ்சிபுரம்.
முடிச்சூர் சாலையில் பழுதான மின் கம்பம்
ஸ்ரீபெரும்புதுார் அடுத்த மணிமங்கலம் -- முடிச்சூர் செல்லும் சாலையில் ஆலடி அம்மன் கோவில் அருகில் உள்ள மின் கம்பம் பழுதடைந்த நிலையில் உள்ளது. இந்த சாலையில் தினசரி நுாற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.
இந்த மின் கம்பம் விழுந்தால் உயிர் பலி ஏற்படும். அதைத் தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கையாக பழுதான மின் கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ப. சந்திரசேகரன், மணிமங்கலம்.