'இவர், நம்மை புதுவிதமாக கையாளுகிறாரே; இவரை எப்படி சமாளிப்பது...' என, சத்தீஸ்கர் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான, பூபேஷ் பாகேல் பற்றி முணுமுணுக்கின்றனர், இங்குள்ள பா.ஜ.,வினர்.
காங்., ஆட்சி நடக்கும் மூன்று மாநிலங்களில், சத்தீஸ்கரும் ஒன்று. இங்கு எப்படியாவது காங்கிரசை தோற்கடித்து, ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்பதற்காக, துடியாய் துடிக்கின்றனர், இங்குள்ள பா.ஜ.,வினர்.
மற்ற மாநிலங்களைப் போல, ஹிந்துத்வாவை மையமாக வைத்து அரசியல் செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் பூபேஷ் பாகேலோ, இந்த விஷயத்தில், பா.ஜ.,வினரை விட ஒரு படி மேலே சென்று விட்டார். மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் பிரமாண்டமான ராமர் சிலைகளை, முதல்வரே திறந்து வைத்து வருகிறார். புனித நகரமாக கருதப்படும் ராஜின் நகரில், 50 அடி உயரமுள்ள ராமர் சிலையை சமீபத்தில் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், 'ராமாயணத்துக்கும், சத்தீஸ்கருக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ராமர் வனவாசத்தின் பெரும்பாலான நிகழ்வுகள் இங்கு தான் நடந்தன. அதனால், ராமர் சென்ற இடமெல்லாம், அவரது பிரமாண்ட சிலைகளை நிறுவ முடிவு செய்துள்ளோம்...' என்றார்.
பூபேஷ் பாகேலின் இந்த புதுவிதமான அரசியலைப் பார்த்து, 'நாம் எட்டடி பாய்ந்தால், இவர், 16 அடி பாய்கிறாரே; இவரை சமாளிப்பது சிரமம் தான் போலிருக்கிறது...' என புலம்புகின்றனர், இங்குள்ள பா.ஜ.,வினர்.