திரைப்பட நடிகர் ஆனந்த்ராஜ் பேட்டி: அடுத்தவர் பட்டத்தை மற்ற யாரும் பறிக்க முடியாது. 'இன்னொருவர் அடையாளத்தை எடுக்காதீர்; நீங்களே ஒரு அடையாளமாக இருங்கள்' என, அடிக்கடி சொல்வார் விஜய். 'புரட்சித் தலைவர்' என்றால், அது எம்.ஜி.ஆர்., ஒருவர் தான். அவர் இறந்தாலும் அந்த பட்டத்தை வேறு ஒருவர் எடுக்க முடியாது. அதேபோல், 'நடிகர் திலகம்' ஒருவர் தான். தற்போது நன்றாக நடிப்பவர்கள், அந்த பட்டத்தை வைத்துக் கொள்ள முடியுமா; கமலுக்கு அந்த பட்டத்தை தர முடியுமா? எதெது எங்கெங்கு இருக்க வேண்டுமோ, அது அது அங்கங்கே இருந்தால் தான் நல்லது.
மக்கள் அளித்த பட்டப்பெயருக்கு ஏற்ப, எம்.ஜி.ஆர்., போன்ற சில கலைஞர்கள், நிஜ வாழ்கையிலும் வாழ்ந்து காட்டினர்... தற்போதைய நடிகர்கள் அப்படி இல்லையே!
***
தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: 'நாட்டின் அனைத்து அமைப்புகளும், பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்புகளால் கைப்பற்றப்பட்டுள்ளன' என, ராகுல் கூறியுள்ளார். சர்வாதிகார, ஊழல்வாத, கலாசார சீர்கேடை உருவாக்கிய, கொடுங்கோல் காங்கிரசிடம் இருந்து கைப்பற்றப்பட்டிருந்தால் தவறே இல்லை.
காங்.,கில் இருக்கும் முக்கியமான தலைவர்களை வரிசை கட்டி, பா.ஜ., கைப்பற்றி வருதே... அந்த ஆத்திரத்தில் ராகுல் அப்படி சொல்லி இருப்பார்!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி: முதிர்ச்சி இல்லாத முதல்வராக, ஸ்டாலின் உள்ளார். 'டென்ஷன்' பார்ட்டியாக இருக்கக் கூடாது. யாராக இருந்தாலும் ஒருமையில் பேசுவது, தமிழர்களின் பண்பாட்டுக்கு அப்பாற்பட்டது; முதல்வர் ஸ்டாலின் பண்பாட்டை வளர்த்துக் கொள்ள வேண்டும். டென்ஷனை விட வேண்டும்; அனைவரையும் மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். சிலர், 'மைக்' முன் டென்ஷனாகின்றனர். சிலர் பத்திரிகையாளர்களை திட்டுகின்றனர்.
முதல்வருக்கு புத்தி சொல்ற சாக்கில், அப்படியே கூட்டணி கட்சியான, பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கும், 'பஞ்ச்' வைக்கிறாரே!
பா.ஜ., சிறுபான்மை அணி தேசிய செயலர் வேலுார் இப்ராஹிம் பேச்சு: நாம் மாற்றத்தை நோக்கி வீரியமாக வேலை செய்து வருகிறோம். தொட முடியாத இலக்கை வேகமாக அடைந்து வருகிறோம். தி.மு.க., ஆட்சிக்கு வருவதற்கு இரண்டு விஷயத்தை பயன்படுத்தினர்... 'பா.ஜ., சிறுபான்மையினருக்கு எதிரான, மொழிக்கு எதிரான கட்சி' என்று கூறினர். இது தவிர வேறு எந்த குற்றச்சாட்டையும், தி.மு.க.,வினர் வைக்க முடியாது. மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில், வாரிசு அரசியல் கிடையாது; ஊழல் குற்றச்சாட்டு கிடையாது.
எந்த குற்றச்சாட்டும் இல்லாததால் தானே, மோடி அரசை மக்கள் தொடர்ந்து ஆதரிக்கின்றனர்... வரும் தேர்தலிலும் இது தொடரும் என, நம்பலாம்!