''பதவிக்காக எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க, பாருங்க பா...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார், அன்வர்பாய்.
''காங்கிரஸ் தகவலாங்க...'' என, பட்டென கேட்டார் அந்தோணிசாமி.
''ஆமா... வடசென்னை கிழக்கு மாவட்ட, காங்., தலைவர் திரவியம், சென்னை மாநகராட்சி, காங்., குழு தலைவராகவும் இருக்காரு... தமிழக, காங்., செயல் தலைவரான வசந்தகுமார் மறைவுக்கு பிறகு, அந்தப் பதவி காலியாவே இருக்குது பா...
''வசந்தகுமாருக்கு பிறகு அவரது சமூகத்தைச் சேர்ந்த தனக்கே அந்தப் பதவியை தரணும்னு, திரவியம் காய் நகர்த்திட்டு இருக்காரு... இதுக்காகவே, தமிழகத்துல ராகுல் நடத்திய நடைபயணத்தின் வீடியோக்களை, 'டிஜிட்டல்' வேன் மூலமா, பல இடங்கள்ல ஒளிபரப்பு பண்ணியிருக்காரு பா...
''இந்த வீடியோ பதிவுகளை ராகுலிடம் வழங்க, வர்ற 20ம் தேதி, 'அப்பாயின்ட்மென்ட்' வாங்கிட்டாரு... ராகுலிடம் வீடியோக்களை குடுத்துட்டு, அப்படியே, தனக்கு செயல் தலைவர் பதவி கேட்டு, 'பிட்'டை போட டில்லிக்கு போயிருக்காரு பா...'' என்றார், அன்வர்பாய்.
''ஹிந்து இயக்க நிர்வாகிகளுக்கான பாதுகாப்பை, சட்டுன்னு, 'வாபஸ்' வாங்கிட்டா ஓய்...'' என, அடுத்த தகவலை ஆரம்பித்த குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''திருப்பூர் சிட்டியில குடியிருக்கற ஹிந்து முன்னணி உள்ளிட்ட ஹிந்து இயக்க நிர்வாகிகள் சிலருக்கு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு குடுத்திருந்தா... சமீபத்துல, திடீர்னு அஞ்சுக்கும் மேற்பட்ட நிர்வாகிகளது பாதுகாப்பை வாபஸ் வாங்கிட்டா ஓய்...
''ஏற்கனவே சிட்டி கமிஷனரா இருந்த பிரபாகரனுடன், ஹிந்து இயக்க நிர்வாகிகளுக்கு சரியான உறவு இல்லாம இருந்துது... அவர் இடம் மாறி போயிட்டாலும், பழைய பகையை போலீஸ் அதிகாரிகள் மனசுல வச்சிருந்து, இப்படி பண்ணிட்டான்னு சொல்றா ஓய்...
''கோவை, திருப்பூர்ல இருக்கற, ஹிந்து இயக்க நிர்வாகிகள் ஆத்து மேல அடிக்கடி கல்வீச்சு, பெட்ரோல் குண்டு வீச்சு நடக்கறதோல்லியோ... 'இந்த சூழல்ல, திருப்பூர் சிட்டி போலீசார் இப்படி செஞ்சது முறையா'ன்னு ஹிந்து இயக்க நிர்வாகிகள் வருத்தப்படறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''தீபாவளிக்கு தான் இனாம் கேட்பாங்கன்னா, பொங்கலுக்கும் கேட்டு நெருக்கடி தந்திருக்காவ வே...'' என, கடைசி தகவலுக்கு மாறினார் அண்ணாச்சி.
''எந்த துறையில ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''தாம்பரம் மாநகராட்சியில இருக்கிற, 15க்கும் மேற்பட்ட சுகாதார ஆய்வாளர்கள் ஒவ்வொருவரும், 'பொங்கல் பண்டிகைக்காக, துறையின் மேலிடத்துக்கு பொங்கல் பரிசு வழங்க, தலா, 1 லட்சம் ரூபாய் தரணும்'னு உயர் அதிகாரிகள் கேட்டிருக்காவ...
''இதைக் கேட்டு ஆய்வாளர்கள் கொதிச்சு போயிட்டாவ... '1 லட்சம் ரூபாய் குடுக்கிற அளவுக்கு, நாங்க என்ன கொள்ளையா அடிக்கோம்... எல்லா, 'டெண்டர்'லயும் ஆளுங்கட்சியினர் தான் புகுந்து விளையாடுதாவ... அரசு அதிகாரிகளிடம் இப்படி பணம் கேட்டு நெருக்கடி தர்றது கேவலமா இருக்கு... எங்களை வேணும்னா மாத்திட்டு, 1 லட்சம் தர்ற அதிகாரிகளை வச்சுக்கங்க'ன்னு குமுறி தள்ளிட்டாவ... பணம் கேட்டவங்க, 'கப்சிப்'னு அடங்கிட்டாவ வே...'' என, முடித்தார் அண்ணாச்சி.
பேச்சு முடிய, பெரிய வர்கள் கிளம்பினர்.