மதுரை:கொரோனா காலகட்டத்தில் கணவர் தற்கொலை செய்ததற்கு, மாநில அரசு இழப்பீடு வழங்க கோரி தாக்கலான வழக்கை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நேற்று முன்தினம் தள்ளுபடி செய்தது.
மதுரையை சேர்ந்த செல்வி என்பவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:
என் கணவர் குமார், ஒரு வங்கியில் கடன் பெற்றார்; சொத்தை அடமானம் வைத்தார். கொரோனா தொற்று காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் கடன் தவணையை செலுத்த முடியவில்லை.
கடனை செலுத்த, வங்கி தரப்பு அச்சுறுத்தியது. இதனால் 2021 ஜன., 31ல் கணவர் தற்கொலை செய்தார்.
எனக்கு இழப்பீடு வழங்கக்கோரி தமிழக உள்துறைச் செயலர், மதுரை கலெக்டருக்கு மனு அனுப்பினேன். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு செல்வி குறிப்பிட்டிருந்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு:
இதில் மாநில அரசை எவ்வாறு பொறுப்பாக்க முடியும் என்பதை புரிந்து கொள்ள இயலவில்லை. மனுதாரரின் கணவர் வங்கியில் கடன் வாங்கியது ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. கடனை செலுத்தத் தவறினால் நடவடிக்கையை தொடர கடன் கொடுத்தவருக்கு உரிமை உண்டு.
நிதி நெருக்கடியால் ஏற்பட்ட மன உளைச்சலால் மனுதாரரின் கணவர் தற்கொலை செய்துள்ளார். இது, துரதிர்ஷ்டவசமான நிகழ்வு. ஆனால் மனுதாரருக்கு எந்த இழப்பீட்டையும் மாநில அரசால் வழங்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் உத்தரவிட்டார்.