செஞ்சி:செஞ்சி அருகே,வைக்கோல் ஏற்றி வந்த லாரி, மின் கம்பியில் உரசி தீப்பிடித்ததில் முற்றிலும் எரிந்து சேதமானது.
தர்மபுரி மாவட்டம், நல்லாம்பள்ளி பாளையத்தைச் சேர்ந்தவர் திருப்பதி, 40. இவர், விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்த மட்டப்பாறை கிராமத்தில் விவசாயிகளிடம் வைக்கோல் வாங்கினார்.
நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு வைக்கோலை 'ஈச்சர்' லாரியில் ஏற்றி புறப்பட்டார். லாரியை டிரைவர் மாரியப்பன், 45, ஓட்டினார். மின் கம்பியில் வைக்கோல் உரசியதில் தீப்பிடித்தது.
இதில், திருப்பதியும், மாரியப்பனும் லாரியில் இருந்து கீழே குதித்து உயிர் தப்பினர்.
வைக்கோலில் பற்றிய தீ, லாரியிலும் பரவியது. லாரியின் அருகில் இருந்த நெற்பயிர்களும் எரிந்தன.
தகவலறிந்த செஞ்சி தீயணைப்பு துறையினர்விரைந்து, நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
அதற்குள், லாரி முற்றிலும் எரிந்து சேதமானது. அனந்தபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.