'கோவை தடாகம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள, 177 செங்கல் சூளைகளில் எவ்வித செயல்பாடுகளும் மேற்கொள்ளக்கூடாது' என, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
கோவை, தடாகம் பள்ளத்தாக்கு பகுதிக்கு உட்பட்ட ஐந்து கிராம ஊராட்சிகளில், அனுமதியின்றி இயங்கி வந்த, 177 செங்கல் சூளைகள், ஐகோர்ட் உத்தரவின்படி, 2021 ஜூன், 13ல் கலெக்டரால் மூடி, 'சீல்' வைக்கப்பட்டன.
அதற்கு முன்பே, செங்கல் சூளைகள் விதிமீறல்கள் தொடர்பாக, நம் நாளிதழில் வெளிவந்த தொடர் கட்டுரையை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன் வந்து வழக்காகப் பதிவு செய்தது.
அந்த வழக்கில், பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி, கலெக்டர் தலைமையிலான குழு, செங்கல் சூளைகளால் நடந்த மண் கொள்ளை மற்றும் சூழலியல் இழப்பு குறித்து, பசுமை தீர்ப்பாயத்திடம் அறிக்கை சமர்ப்பித்தது.
அதில், 373 கோடி ரூபாய்க்கு மண் கொள்ளை நடந்திருப்பதாகவும், 66 கோடி ரூபாய் அளவுக்கு சூழலியல் இழப்பு நடந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அபராதம் தொடர்பாக இறுதி உத்தரவு வருவதற்கு முன்பே, தமிழக அரசை செங்கல் சூளை உரிமையாளர்கள் அணுகி வந்தனர்.
செங்கல் விற்பனை
அவர்களின் மேல் முறையீட்டை ஏற்று, தமிழக அரசின் புவியியல் மற்றும் சுரங்கத் துறை கமிஷனர் செயல்முறை ஆணை பிறப்பித்தார்.
அதில், தவணை முறையில் அபராதம் செலுத்தவும், முதலில், 2 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்தி விட்டு, சூளைகளை இயக்கலாம் என்றும் கூறப்பட்டது.
அதன்படி, 2 லட்சம் ரூபாய் செலுத்தி விட்டு, சூளைகளில் இருப்பிலிருந்த பல லட்சம் செங்கல்கள் எடுத்துச் சென்று விற்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக, செங்கல் சூளைகளுக்கு எதிரான பல்வேறு மனுதாரர்களும், ஐகோர்ட் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றனர்.
அதில், சுரங்கத்துறை கமிஷனரின் உத்தரவுக்கு ஐகோர்ட் தடை விதித்தது. ஆனால், தடையுத்தரவை மீறி, செங்கல் எடுத்துச் செல்லப்படுவதாக ஆதாரங்களுடன் கோவை கலெக்டரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
கலெக்டர் உத்தரவு
அதன் அடிப்படையில், கோவை கலெக்டர் சமீரன், கடந்த, 13ம் தேதி முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
கோவை ரூரல் எஸ்.பி., கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர், பெரியநாயக்கன் பாளையம் டி.எஸ்.பி., மற்றும் கோவை வடக்கு தாசில்தார் ஆகியோருக்கு, இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள அந்த கடிதத்தில் கூறியுள்ளதாவது:
தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த ஜன., 6ல் வழங்கிய உத்தரவின்படி, ஜன., 11ல் இவ்வழக்கின் விசாரணை நடைபெறவுள்ளதால், தற்பாதுள்ள நிலையே தொடர வேண்டும்.
இவ்வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பு வழங்கப்படும் வரை, செங்கல் சூளைகளில் எவ்வித செயல்பாடுகளும் மேற்கொள்ளாத வகையில் கண்காணிக்கவும், மீறும்பட்சத்தில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- நமது நிருபர் -