ஓசூர்:தமிழகத்தில் இருந்து, கர்நாடகா மாநிலத்திற்கு கனிமவளம் கடத்தப்பட்டு வருவதால், தமிழகத்தில் 'எம்.சாண்ட்' விலை உயர்ந்து வருவது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை அதிகாரிகள், அரசு கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்க்கிறது.
தமிழக எல்லையான கிருஷ்ணகிரி மாவட்டம், கர்நாடகா, ஆந்திர மாநிலங்களுக்கு அருகாமையில் அமைந்துள்ளது. மாவட்டத்தில் மொத்தம், 110க்கும் மேற்பட்ட கல் குவாரிகள் இயங்கி வருகின்றன.
இதில், ஓசூர், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, சூளகிரி தாலுகாவில் மட்டும், 60க்கும் மேற்பட்ட குவாரிகள் மற்றும் கிரசர்கள் இயங்குகின்றன.
பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபர்கள், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பணம் பலம் படைத்தவர்கள், ஐந்து ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் மலைகளை ஏலம் எடுத்து, கனிமவளங்களை வெட்டி எடுத்து, கருங்கல் ஜல்லி, எம்.சாண்ட் போன்றவற்றை கர்நாடகா மாநிலத்திற்கு விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.
இதில் கருங்கல் ஜல்லி கர்நாடகா மாநிலத்திற்கு செல்ல எந்த தடையும் இல்லை; ஆனால், எம்.சாண்டை கர்நாடகா கொண்டு செல்ல கூடாது.
ஆனால், தடையை மீறி கர்நாடகா மாநிலத்திற்கு தினமும் இரவில் நுாற்றுக்கணக்கான லாரிகளில் எம்.சாண்ட் கடத்தப்படுகிறது.
இதை கண்டும், காணாமல் இருக்க, வருவாய்த்துறை, கனிமவளத் துறை என, அனைத்து மட்ட அதிகாரிகளும் கவனிக்கப்படுகின்றனர்.
பெயரளவிற்கு மட்டும் மாதக் கணக்கு காட்ட, தாசில்தார் மற்றும் கனிமவளத்துறையினர் எம்.சாண்ட் ஏற்றி செல்லும் லாரிகளை பறிமுதல் செய்கின்றனர். ஆனால், தினமும் எம்.சாண்ட் கடத்தல் தொடர் கதையாக உள்ளது.
கர்நாடகா மாநிலத்திற்கு கடத்தப்படும் எம்.சாண்டை எவ்வளவு விலை என்றாலும் கொடுத்து வாங்க பலர் தயாராக உள்ளனர்.
அதனால், தமிழகத்தில் எம்.சாண்ட்டிற்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதை வைத்து விலையை உயர்த்தி விடுகின்றனர்.
கடந்த, 6 மாதத்திற்கு முன், கட்டட பூச்சு வேலைக்கு பயன்படும் எம்.சாண்ட் ஒரு யூனிட், 5,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. அது தற்போது, 6,000 ரூபாயை எட்டியுள்ளது.
கான்கிரீட் மற்றும் கல் கட்டங்களுக்கு பயன்படுத்தும் எம்.சாண்ட், 4,500 ரூபாயாக விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இது, 6 மாதத்திற்கு முன், 3,800 ரூபாயக்கு கிடைத்தது. இந்த விலையேற்றதால், ஆயிரம் சதுர அடியில் வீடு கட்டும் மக்களுக்கு கூடுதலாக, 50 ஆயிரம் ரூபாய் வரை செலவு அதிகரித்துள்ளது.
லாரிகளின் வாடகையை பொறுத்து, எம்.சாண்ட் விலை மேலும் அதிகரிக்கிறது. இது வீடு கட்டும் மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
கர்நாடகாவிற்கு எம்.சாண்ட் கடத்தப்படுவதை தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் கண்டுகொள்வதில்லை. 'ஓசூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன்' இந்த விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
கர்நாடகா மாநிலத்திற்கு கடத்தப்படும் எம்.சாண்டை தடுத்து நிறுத்த வேண்டும் என, அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளது.
ஆனால், இதுவரை மாவட்ட நிர்வாகம் தரப்பில் நடவடிக்கை இல்லை. கர்நாடகா மாநில தேவைக்காக, தமிழகத்தின் மலைகள் உடைக்கப்பட்டு, அம்மாநிலத்திற்கு கடத்தப்பட்டு வருகிறது.
ஆனால், கவனிப்பு பெற்றுக்கொள்ளும் அதிகாரிகள், கண்டும் காணாமல் வேடிக்கை பார்க்கின்றனர். கிருஷ்ணகிரியில் உள்ள கிரி என்ற வார்த்தை மலையை குறிக்கும்.
ஆனால், இன்னும் சில ஆண்டுகளில் கர்நாடகா மாநில தேவைக்காக கிருஷ்ணகிரியில் உள்ள அனைத்து மலைகளும் உடைக்கப்பட்டு விட்டால், மலை இல்லாத மாவட்டமாக கிருஷ்ணகிரி மாறி விடுவதுடன், மழைப்பொழிவும் இல்லாத மாவட்டமாக மாறி விடும் என, சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து, ஓசூர் தாசில்தார் கவாஸ்கரிடம் கேட்ட போது, ''எம்.சாண்ட் கடத்தல் லாரிகளை பிடித்து தான் வருகிறோம். தற்போது கூட மூன்று லாரிகளை பறிமுதல் செய்துள்ளோம்,'' என்றார்.
தினமும் நுாற்றுக்கணக்கில் லாரிகளில் கனிமவளங்கள் கடத்தப்படும் நிலையில், மூன்று லாரிகள் தான் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதா என கேட்டதற்கு, ''வெளியில் இருக்கிறேன்; பின்னர் பேசுகிறேன்,'' என்றார்.