பொங்கலுக்கு ரிலீசான வாரிசு, துணிவு படங்களுக்கு அனுமதியின்றி சிறப்புக்காட்சிகளை திரையிட்ட தியேட்டர்கள் மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழகத்தில் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் முக்கிய நடிகர்களின் படங்கள் ரிலீசாவது வழக்கம்.
சில ஆண்டுகளாக படம் ரிலீசாகும் நாட்களில் முதலில் திரையிடப்படும் சில காட்சிகள், ரசிகர் மன்றங்களுக்கான சிறப்பு காட்சிகளாக திரையிடப்படுகின்றன. வழக்கமான தினசரி காட்சிகளுக்கு முன்பாக, அதிகாலை நேரத்தில் இந்த காட்சிகளை திரையிடுகின்றனர்.
சட்டத்தில் இடமில்லை
தமிழ்நாடு சினிமா ஒழுங்குமுறை விதிகள், 1957ன்படி, சிறப்புக்காட்சிகள் திரையிடுவதற்கு, சட்டத்திலேயே இடமில்லை.
தியேட்டர்களில் திரையிடப்படும் காட்சிகளுக்கான அனுமதியை அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம் தான் பெற வேண்டும்.
ஆண்டுதோறும் அதைப் புதுப்பிக்க வேண்டும். ஆனால், சிறப்பு காட்சிகளுக்கு எந்த மாவட்டத்திலும் எவ்விதமான அனுமதியும் வழங்கப்படுவதில்லை.
இந்நிலையில், கடந்த 11ம் தேதியன்று, தமிழகத்தில் வாரிசு மற்றும் துணிவு ஆகிய இரண்டு படங்களும் ரிலீஸ் செய்யப்பட்டன.
பொங்கல் நாளில் ரிலீசாக வேண்டிய படத்தை, மூன்று நாட்களுக்கு முன்பே ரிலீஸ் செய்தனர். அதற்கும் முன்பே, தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர், கடந்த 9ம் தேதியன்று ஓர் உத்தரவை வெளியிட்டார்.
ரூ. 2,000 வரை விற்னை
புகாரின் அடிப்படையில், அவர் வெளியிட்ட அந்த உத்தரவில், ஜன., 13லிருந்து, 15 வரை, இந்த இரண்டு படங்களின் சிறப்புக் காட்சிகளுக்கும் அனுமதி கிடையாது என்று குறிப்பிட்டிருந்தார்.
கூடுதல் தொகைக்கு டிக்கெட் விற்கப்படும் பட்சத்தில், அதன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அந்த உத்தரவில் அனைத்து கலெக்டர்களுக்கும் அவர் அறிவுறுத்தியிருந்தார்.
ஆனால், தமிழகத்தில் நுாற்றுக்கணக்கான தியேட்டர்களில், அனுமதியே இல்லாமல் கடந்த, 11ம் தேதியன்று நள்ளிரவு, 1:00 மணிக்கும், அதிகாலை, 4:00க்கும் இவ்விரு படங்களின் சிறப்புக்காட்சிகளும் திரையிடப்பட்டன.
ரசிகர் மன்றங்களுக்கு, மொத்தமாக டிக்கெட்கள் ஒதுக்கப்பட்டு, 'பிளாக்'கில், ஒரு டிக்கெட் 1,500-2,000 ரூபாய் வரை விற்கப்பட்டன.
வாரிசு நிறுவனம்
அனுமதியின்றி சிறப்புக்காட்சி, கூடுதல் கட்டணம் வசூல் ஆகியவற்றுக்கு, எந்த தியேட்டர் நிர்வாகத்தின் மீதும், எந்த கலெக்டரும் பெயரளவுக்கும் நடவடிக்கை எடுக்கவில்லை.
ஆளும் கட்சி மேலிடத்தின் வாரிசு நிறுவனம், இந்த படங்களை வெளியிட்டதே இதற்கு காரணம். கோவையில் மட்டுமே, சட்டம் - ஒழுங்கை காரணம் காட்டி சில தியேட்டர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
சிறப்புக் காட்சிகள் திரையிட்டதில் சட்ட விதிமீறல் நடந்திருப்பதோடு, பல கோடி ரூபாய் ஜி.எஸ்.டி., ஏய்ப்பும் நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில், 100 ரூபாய் வரையிலான சினிமா டிக்கெட்களுக்கு, 18 சதவீதமும், அதற்கு மேல் தொகையுள்ள டிக்கெட்களுக்கு, 28 சதவீதமும் ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்படுகிறது.
பெரும்பாலும் 'ஆன்லைன்' முறையில் 'புக்கிங்' நடப்பதால் அதை வைத்தே வரி வசூலிக்கப்படுகிறது.
வரி ஏய்ப்பு
ஆனால், அனுமதியே இல்லாமல் திரையிடப்பட்ட சிறப்பு காட்சிகளில், தியேட்டரின் மொத்த டிக்கெட்களும் ரசிகர் மன்றங்களுக்கு தரப்படுவதால், அவை 'ஆன்லைன்' கணக்கில் வரவே வாய்ப்பில்லை.
இதில், பல நுாறு கோடி ரூபாய் கருப்புப்பணம் புழங்குவதுடன், வரி ஏய்ப்பும் பகிரங்கமாக நடக்கிறது.
இதுகுறித்து, ஜி.எஸ்.டி., துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'தியேட்டர்களில் அனுமதியில்லாத சிறப்பு காட்சிகளுக்கு 'ஆன்லைன்' முறையில் 'புக்கிங்' நடந்திருந்தால், அதற்கு ஜி.எஸ்.டி., வசூலிக்கப்பட்டு விடும். ஆனால் 'ஆன்லைன்' புக்கிங் இல்லாமல், மொத்தமாக ரசிகர்களுக்கு டிக்கெட்கள் கொடுக்கப்பட்டிருந்தால் அவர்களாகவே கணக்கு கொடுத்தால்தான் வரி வசூலிக்க முடியும்' என்றனர்.
இந்த விதிமீறலை அரசு கண்டு கொள்ளாமலிருப்பது, மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
-நமது சிறப்பு நிருபர் -