புதுடில்லி:நேரடி விற்பனை வாயிலாக, 2,000 கோடி ரூபாய்க்கு பணப்பரிமாற்ற மோசடியில் ஈடுபட்ட நிறுவனத்தின் 90 கோடி ரூபாய் மதிப்பிலான வங்கி கணக்குகளை அமலாக்கத்துறை முடக்கியது.
மஹாராஷ்டிராவின் மும்பையை சேர்ந்த, 'கியூநெட்' என்ற நிறுவனம், பல்வேறு பிரபல,'பிராண்ட்'களின் பொருட்களை நேரடி விற்பனை செய்து வருகிறது.
இதன் துணை நிறுவனமான 'விஹான் டைரக்ட் செல்லிங் இந்தியா' என்ற நிறுவனம் வாயிலாக, அப்பாவி மக்களிடம் இருந்து, 'பொன்சி' திட்ட முதலீட்டின் கீழ் பல ஆயிரம் கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது.
இவர்கள் பல்வேறு போலி நிறுவனங்களின் பெயரில் 2,000 கோடி ரூபாய் அளவுக்கு பணப்பரிமாற்ற மோசடியில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக மும்பை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
அதன் அடிப்படையில் இந்த வழக்கை அமலாக்கத் துறை விசாரணைக்கு எடுத்தது. இதையடுத்து, இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் சொந்தமான மும்பை, பெங்களூரு மற்றும் சென்னையில் உள்ள இடங்களில் அமலாக்கத் துறையினர் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.
இவர்களுக்கு சொந்தமான 36 வங்கிக் கணக்குகளில் இருந்த 90 கோடி ரூபாய் முடக்கப்பட்டது.