கடலுார்:கடலுாரில், பஸ் சக்கரத்தில் தலையை வைத்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட பதை பதைக்க வைக்கும் வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடலுார் அருகே உள்ள உண்ணாமலை செட்டிச்சாவடி பனங்காட்டு காலனியைச் சேர்ந்தவர் கோபால் மகன் குணசேகரன், 29; கடலுார் அரசு மருத்துவமனை அருகே உள்ள வாகன பராமரிப்பு நிலையத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன், மனைவி பவானி மற்றும் மகனுடன் கடலுார் கடற்கரைக்கு சென்றார்.
அங்கு குளிக்கும்போது, குணசேகரன் கண் எதிரே, மனைவி பவானி கடலில் அடித்துச் செல்லப்பட்டு இறந்தார்.
அதுமுதல், குணசேகரன் வேலைக்கு செல்லாமல் மன வேதனையில் இருந்து வந்தார். குழந்தையை குணசேகரனின் பெற்றோர் பராமரித்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த 7ம் தேதி காலை, கடலுார் சாவடி பஸ் நிறுத்தத்திற்கு வந்த குணசேகரன், அந்த வழியாக பண்ருட்டி நோக்கி சென்ற தனியார் பஸ் சக்கரத்தில் விழுந்து தற்கொலைக்கு முயன்றார்.
அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த டிரைவர், பஸ்சை நிறுத்திவிட்டார். பஸ் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள், குணசேகரனை அங்கிருந்து விரட்டி விட்டனர்.
ஆனாலும், தற்கொலை முடிவில் உறுதியாக இருந்த குணசேகரன், அன்று மாலை மீண்டும் அதே இடத்திற்கு வந்து, பயணியரை இறக்கிவிட்டு தனியார் பஸ் புறப்படும்போது, திடீரென பின் சக்கரத்தில் தலையை வைத்து படுத்தார். இதனால், சக்கரம் ஏறி தலை நசுங்கி அதே இடத்தில் உயிரிழந்தார்.
பஸ்சில் அடிபட்டு இறந்ததாக, கடலுார் நகர போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், குணசேகரன் தற்கொலை செய்து கொள்ளும் பதை பதைக்க வைக்கும் காட்சி, அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ பதிவு, சமூக வலைதளங்களில் வைரலாகி, கடலுார் பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.