காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த ஆற்பாக்கம் பகுதியில் பொதுப்பணித் துறை பராமரிப்பில் ஏரி உள்ளது. இந்த ஏரி கடந்த ஆண்டும் பருவ மழைக்கு நிரம்பி கலங்கல் நீர் வெளியேறியது. இந்த ஆண்டும் ஏரி முழுமையாக நிரம்பியது.
இதனால் ஏரி பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் அனைவரும் நெல் நாற்று நடவு செய்துள்ளனர். மீன் பிடிக்க தண்ணீரை வெளியேற்றாமல் இருந்தால் இரு போகம் விவசாயம் செய்யலாம் என அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:
ஆற்பாக்கம் பகுதியில் 400 ஏக்கர் விவசாயம் நிலம் உள்ளது. இதில் கிழக்கு பகுதியில் மட்டும் சிலர் கிணற்று பாசனத்தில் விவசாயம் செய்கின்றனர். மற்றவர்கள் அனைவரும் இந்த ஏரி பாசனத்தை நம்பியே உள்ளனர்.
கடந்த ஒரு ஆண்டுக்கு முன் ஏரி நிரம்பாததால் பாதிக்கு மேல் விவசாயம் செய்யாமல் தரிசாக கிடந்தது.
கடந்த ஆண்டும் ஏரி நிரம்பியது. இந்த ஆண்டும் ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேறியது.
மேலும் இருக்கும் தண்ணீரில் இரு போகம் விவசாயம் செய்யலாம். ஆனால் இந்த போகம் முடிந்தவுடன் ஆளும் கட்சியை சேர்ந்த சிலர் சுய லாபத்திற்காக மீன் பிடிப்பதற்காக ஏரியை ஏலம் விட்டு தண்ணீரை வெளியேற்றி விடுகின்றனர்.
கடந்த ஆண்டு இது போன்ற சம்பவம் நடந்தது. இந்த ஆண்டும் அவ்வாறு நடக்காமல் தண்ணீரை பாதுகாக்க பொது பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரியில் தண்ணீர் வற்றிய பின் மீன் பிடிக்க ஏலம் விட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.