ஸ்ரீபெரும்புதுார்:வனபகுதியில் உணவு கழிவுகளை கொட்டிய, ஹோட்டல் நிறுவனத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த வனத்துறை, தொடர்ந்து குப்பை, உணவு கழிவுகள் கொட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அருகே மண்ணுார், மாகாண்யம், வட்டம்பாக்கம், வடக்குப்பட்டு, புதுப்பேடு, நல்லுார் ஆகிய பகுதிகளில் 4,500 ஏக்கர் பரப்பளவில் காப்புக் காடு உள்ளது.
இங்கு, மான், முயல், மயில், முள்ளம்பன்றி, உடும்பு, நரி உள்ளிட்ட ஏராளமான வன உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.
ஸ்ரீபெரும்புதுார் வனச் சரகம் மூலம் காப்புக் காடுகள் பகுதி பாதுகாத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஸ்ரீபெரும்புதுார் சுற்றுபுறங்களில் தொழிற்சாலைகள் அதிகரித்து வருவதால் காப்புக் காடு அருகே உள்ள மேய்க்கால் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வீடுகளாகவும், தொழிற்சாலைகளாகவும் மாறி வருகின்றன.
ஸ்ரீபெரும்புதுார் வன சகரத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காப்புக் காட்டை ஓட்டியுள்ள மேய்க்கால் நிலங்கள் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளன.
இந்த நிலங்கள் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்து அங்கு அதிக அளவிலான மரங்கள் வளர்த்து வனப் பரப்பை அதிகரிக்க வேண்டும்.
தொழிற்சாலை புகை மாசுகளை குறைக்க வனப் பகுதியைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள், வீணாகும் உணவுகள் காப்புக் காட்டில் கொட்டி எரிக்கப்படுகின்றன. இதனால், சுற்றுச் சூழல் மாசு ஏற்படுகிறது. வனப் பகுதி அழிந்து வன விலங்குகள் பாதிக்கப்படுகின்றன.
வனப் பகுதியில் குப்பை, உணவுக் கழிவுகள் கொட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.
இந்நிலையில் ஸ்ரீபெரும்புதுார் வனசரகம் கட்டுப்பாட்டில் உள்ள மண்ணுார் காப்புக் காட்டில் சென்னை பல்லாவரத்தில் உள்ள பிரபல உணவு சமைக்கும் நிறுவனத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள தொழிற்சாலைக்கு உணவு அனுப்பப்படுகிறது.
இதில் வீணாகும் உணவுகள் மண்ணுார் காப்பு காட்டில் கொட்டப்பட்டது.
இதைக் கண்டறிந்த ஸ்ரீபெரும்புதுார் வனத்துறையினர் காஞ்சிபுரம் மாவட்ட வன அலுவலர் ரவிமீனா உத்தரவு படி 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
கைது நடவடிக்கை
ஸ்ரீபெரும்புதுார் வனச் சரகம் கட்டுப்பாட்டில் உள்ள காப்புக் காட்டில் கழிவுகள் கொட்டினால், நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு பலகை வைத்துள்ளோம். இதையும் மீறி வன பகுதியில் தொழிற்சாலைக் கழிவு, உணவுக் கழிவு கொட்டினால் அபராதம் மட்டுமின்றி கைது நடவடிக்கையும் எடுக்கப்படும்.
-வி.ராஜ்குமார், வனச்சரகர், ஸ்ரீபெரும்புதுார்.
ஸ்ரீபெரும்புதுார் அருகே உள்ள தொழிற்சாலைகளுக்கு தனியார் உணவு தயாரிப்பு நிறுவங்களில் இருந்து தொழிலாளர்களுக்கு உணவு சமைத்து வாகனங்களில் அனுப்பி வைக்கப்படுகிறது. வீணாகும் உணவுகள் ஓரிரு நாட்களுக்கு பின் காப்புக் காட்டில் கொட்டப்படுகிறது. அழுகிப்போன இந்த உணவை உண்ணும் வன விலங்குகள் நோய் வாய்பட்டு இறக்கின்றன. இது தவிர்க்கப்பட வேண்டும்.