பொன்னேரி:பொன்னேரி அரசு கலை கல்லுாரி வளாகத்தில், நேற்று, போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி, திருவள்ளூர் கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் நடந்தது.
பொன்னேரி சப் - கலெக்டர் ஐஸ்வர்யா, டி.எஸ்.பி.,கிரியாசக்தி, தாசில்தார் செல்வகுமார், கல்லுாரி முதல்வர் சேகர், நகராட்சி தலைவர் பரிமளம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
பல்வேறு கல்லுாரிகளைச் சேர்ந்த மாணவர்களின் விழிப்புணர்வு நாடகம், கண்காட்சி, போதை தடுப்பு ரங்கோலிகள் ஆகியவற்றை அதிகாரிகள் பார்வையிட்டனர்.போதை தடுப்பு விழிப்புணர்வு தொடர்பாக கல்லுாரி வளாகத்தில் ராட்சத பலுான் பறக்க விடப்பட்டது.
பின், கல்லுாரி மாணவர்களிடம் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் பேசியதாவது:
பள்ளி, கல்லுாரிகளின் அருகில் உள்ள கடைகளில் சோதனைகள் செய்து கஞ்சா, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து வருகிறோம்.
ஒவ்வொருவருக்கும், 15 - 27 வயதிலான காலகட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்த காலகட்டத்தில் தான் நாம் நம்முடைய வாழ்க்கையை தீர்மானம் செய்யும் காலமாகும். இந்த கால கட்டத்தில் போதைக்கு அடிமையானால் அதிலிருந்து மீண்டு வருவது மிகவும் கடினம்.
போதைக்கு அடிமையாக மாட்டோம் என்று, நீங்கள் மிக முக்கியமான முடிவு எடுக்க வேண்டும்.
இந்த முடிவால் உங்கள் கல்வி, வாழ்க்கை என அனைத்தும் நல்ல நிலையில் இருக்கும். நன்கு படிக்கும் மாணவர்கள் கூட போதைக்கு அடிமையாவதால், அவர்கள் நல்ல நிலைக்கு வர முடியாமல் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது.
அனைத்து மாணவர்களும் இளமை காலத்தில் போதைக்கு அடிமை ஆக மாட்டோம் என உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.