திருத்தணி:திருத்தணி நகராட்சி, கலைஞர் நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்வதற்காக புதிதாக, 9 லட்சம் ரூபாய் மதிப்பில், கழிவு நீர் கால்வாய் கட்டி பயன்பாட்டிற்கு விடப்பட்டது.
இக்கழிவு நீர் கால்வாயில் இருந்து தண்ணீர் திருத்தணி- - திருவள்ளூர் சாலையில் நந்தியாற்றின் குறுக்கே கட்டியுள்ள உயர்மட்ட பாலம் அருகே நேரடியாக நந்தியாற்றில் கலக்கிறது.
ஆற்றில் கழிவு நீர் கலப்பதால், தண்ணீர் மாசுபடுகிறது.
குறிப்பாக, நந்தியாற்று தண்ணீர் கொசஸ்தலை ஆற்றில் கலந்து, திருவள்ளூர் அருகே உள்ள சென்னைக்கு குடிநீர் வழங்கும் நீர்த்தேக்கமான பூண்டி ஏரிக்கு செல்கிறது.
கழிவு நீர் கலந்து குடிநீர் மாசுபடுவதால், இதுகுறித்தான செய்தி நம் நாளிதழில் நேற்று வெளியானதையடுத்து, திருத்தணி நீர்வளத் துறையின் உதவி செயற்பொறியாளர் சிவசண்முகம், உதவிப் பொறியாளர் சுந்தரம் ஆகியோர் நந்தியாற்றில் நகராட்சி கழிவு நீர் கலக்கும் இடத்தை நேரில் ஆய்வு செய்தனர்.
பின், நகராட்சிக்கு நோட்டீஸ் வழங்கிஉள்ளனர்.
அந்த நோட்டீஸ்சில், நகராட்சியில் வெளியேறும் கழிவு நீர் நேரடியாக நந்தியாற்றில் கலப்பதால் சென்னை பெரு மாநகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள பூண்டி நீர்த்தேக்கத்தில் தண்ணீர் மாசுபடும் அபாயம் உள்ளது.
எனவே, திருத்தணி நகராட்சி கழிவு நீர் நந்தியாற்றில் கலப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும். கழிவு நீர் வெளியேறும் பகுதியில் சுத்திகரிப்பு நிலை யம் அமைத்து மாற்றுப் பாதையில் கழிவு நீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தவறும் பட்சத்தில் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என, குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த நோட்டீஸ் நேற்று, நகராட்சி அலுவலகத்தில் வழங்கி அறிவுறுத்தப்பட்டது.