அவிநாசி:அவிநாசி பேரூராட்சி பகுதியில், பொங்கல் விடுமுறை நாட்களில், கூடுதலாக, 15 டன் குப்பை வெளியேற்றப்பட்டது.
பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை முடிந்து, இயல்புநிலை திரும்பியுள்ள நிலையில், போகி பண்டிகையின் போது, பொதுமக்கள், தங்கள் வீடுகளில் உள்ள பழைய துணி, பொருட்களை வெளியேற்றினர்.
வெளியேற்றப்படும் பழைய பொருட்களை எரியூட்டினால் புகைமாசு ஏற்படும் என்பதால், அத்தகைய செயலில் யாரும் ஈடுபடக் கூடாது என, பேரூராட்சி நிர்வாகம் ஏற்கனவே எச்சரித்திருந்தது. இந்நிலையில், பேரூராட்சியில் உள்ள, 18 வார்டில், வழக்கமாக, தினமும், 10 முதல், 12 டன் குப்பை சேகரிக்கப்படும். கடந்த மூன்று நாட்களில், தினமும், 3 முதல், 5 டன் வரை கூடுதலாக குப்பை சேர்ந்து, வழக்கத்தை காட்டிலும், 15 டன் குப்பை கூடுதலாக சேகர மாகியுள்ளது.
பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், 'பழைய துணி, படுக்கை, மெத்தை உள்ளிட்ட பொருட்கள் தான் அதிகளவில் வெளியேற்றப்பட்டுள்ளது; மக்கும் குப்பைகள், உரமாக மாற்றப்படுகின்றன. மக்காத பொருட்களை, சிமென்ட் நிறுவனத்தினர் தங்களின் எரிபொருள் தேவைக்கென எடுத்துச் சென்று விடுகின்றனர்,' என்றனர்.--