மறைமலை நகர்:மறைமலை நகர் - ஆப்பூர் சாலை, 7 கி.மீ., நீளம் உடையது. இந்த சாலை சிங்கபெருமாள் கோவில் - ஸ்ரீபெரும்புதுார் சாலையின் இணைப்பு சாலை.
இந்த சாலையை, பேரமனுார், சட்டமங்களம், கணபதி நகர் உள்ளிட்ட பகுதி மக்கள், மறைமலை நகர், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு சென்று வர, பயன்படுத்தி வருகின்றனர்.
அதேபோல, கூடுவாஞ்சேரி, காட்டாங்கொளத்துார் உள்ளிட்ட பகுதிகளில் வசிப்போர், ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு, இருசக்கர வாகனங்களில் சென்று வர பயன்படுத்துகின்றனர்.
சட்டமங்களம் பகுதியில், இந்த சாலையின் குறுக்கே, மழை நீர் வடிகால்வாய் உள்ளது. இந்த கால்வாய், இருபுறமும் தடுப்பு சுவர் இல்லாமல் உள்ளது.
இதனால், இரவு நேரங்களில், இருசக்கர வாகனங்களில் செல்வோர் தவறி விழுந்து, விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
இது குறித்து, இப்பகுதி மக்கள் கூறியதாவது:
மழை நீர் வடிகாலின் இருபுறமும், தடுப்புகளும், எச்சரிக்கை பலகைகளும் இல்லாததால், இரவில் இந்த சாலையை புதிதாக பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.
கால்வாய் குறுகலாக உள்ளதால், மழை காலங்களில் வெள்ள நீர் வேகமாக வெளியேறுவதில் தடை ஏற்படுகிறது. எனவே, இந்த கால்வாயை அகலப்படுத்தி, இருபுறமும் தடுப்புகள் அமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.