அவிநாசி;தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ இணைய தளத்தில், பழைய கலெக்டரின் பெயர் இடம் பெற்றிருப்பதால், வாக்காளர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
இந்திய தேர்தல் ஆணையம், லோக்சபா தேர்தலுக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளை செய்து கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இப்பணிகளை தேர்தல் ஆணையத்தின் இணைய தளம் மற்றும் 'மொபைல் ஆப்' மூலமே எளிதாக செய்து கொள்ள வசதி உள்ளது.
அதில், வாக்காளர் அடையாள அட்டை எண்ணை உள்ளீடு செய்யும் போது, எந்த தொகுதி, சம்மந்தப்பட்ட ஓட்டுச்சாவடி விவரம், மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியாக செயல்படும் அந்த மாவட்ட கலெக்டர் பெயர் உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்றுள்ளன.
நீலகிரி லோக்சபா தொகுதி, அவிநாசி, மேட்டுப்பாளையம், பவானிசாகர், குன்னூர், ஊட்டி, கூடலூர் ஆகிய சட்டசபை தொகுதிகள் அடங்கியுள்ளன. இதில், நீலகிரி மாவட்டத்தில் இருந்து ஏராளமானோர் கோவை, திருப்பூர் உட்பட பல இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ள நிலையில், வாக்காளர் பட்டியலில் உள்ள அவரவர் பெயரை சரிபார்த்து கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
இணைய தள பக்கத்தில் நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா என்றே இன்னும் இருக்கிறது. அவர் பணியிட மாற்றலாகி தற்போது, கலெக்டராக அம்ரித், பணிபுரியும் நிலையில், இணைய தளத்தில் அவரது பெயர் மாற்றப்படாமல் இருப்பது, குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.