மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில், பேரூராட்சி நிர்வாகம், தன்னார்வ நிறுவனம் மூலம், வீடுதோறும் மக்கும், மக்காத, மறுசுழற்சி குப்பை என, தனித்தனியே சேகரித்து, வளம் மீட்பு பூங்கா வளாகத்தில் சேர்க்கின்றனர்.
மக்கும் குப்பையில், இயற்கை, மண்புழு உரங்கள் தயாரிக்கப்படுகின்றன. உணவு, இறைச்சி கழிவுகளிலிருந்து, இயற்கை எரிவாயு தயாரிக்கப்படுகிறது.
மாமல்லபுரம், கருங்குழி ஆகிய பேரூராட்சி பகுதிகள், மாதிரி நகராக அறிவிக்கப்பட்ட நிலையில், பிற மாவட்ட பேரூராட்சிகளின் ஊழியர்கள், இப்பகுதிகளின் திடக்கழிவு மேலாண்மை செயல்பாட்டை, அவ்வப்போது பார்வையிடுகின்றனர்.
நேற்று, கோவை, உதகமண்டலம் மாவட்ட பேரூராட்சிகளின் சுகாதார ஆய்வாளர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட ஊழியர்கள், மாமல்லபுரத்தில் பார்வையிட்டனர்.
வீடுகள், கடைகளில், குப்பையை தரம் பிரித்து அளிக்க, விழிப்புணர்வு அளிப்பது, அவற்றை சேகரிப்பது, வளம் மீட்பு பூங்கா கொண்டு சென்று கையாள்வது உள்ளிட்ட செயல்பாடுகள் குறித்து, சுகாதார ஆய்வாளர் ரகுபதி, துப்புரவு மேற்பார்வையாளர் தாமோதரன், தன்னார்வ நிறுவன ஊழியர்கள் விளக்கினர்.