திருப்பூர்:திருப்பூர் - பல்லடம் ரோட்டில், தென்னம்பாளையம் சிக்னல் சந்திப்பு அருகே, மழைநீர் தேங்குவை தவிர்க்க, சாலையின் இடதுபுறம் இருந்து வலதுபுறம் மழைநீர் வழிந்தோட ஏதுவாக, தரைப்பாலம் கட்டும் பணி இரு மாதங்களுக்கு முன் துவங்கியது.
சாலையின் ஒரு பகுதியில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு, பணி மேற்கொள்ளப்பட்டது. ஒருபுறம் பணி முடிந்து மறுபுறம் வாகனங்கள் திருப்பி விடப்பட்டது. இந்நிலையில், பாலம் கட்டும் பணி இருபுறமும் முழுமையாக முடிந்து, பத்துநாட்கள் கடந்தும் இன்னமும் சாலை அமைக்கவில்லை.
பல்லடம் மெயின்ரோடு, நாள் முழுதும் தொடர்ந்து வாகனங்கள், அதிக பாரத்துடன் கனரக வாகனங்கள் சென்று கொண்டே இருப்பதால், பாலம் அமைக்கப்பட்ட இடத்துக்கு அருகே உள்ள தார்சாலை பெயர்ந்து, ஜல்லிக்கற்கள் பரவிக்கிடக்கிறது.
இது தெரியாமல், வேகமாக வரும் வாகன ஓட்டிகள் சறுக்கி விழுகின்றனர். இலகு ரக வாகனங்கள் அருகில் வந்த பின் நிலையை தெரிந்து கொண்டு பிரேக் செலுத்தி, வேகத்தை குறைப்பதால், பின்தொடர்ந்து வரும் வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.
விபத்து ஏற்படும் சூழல் நிலவுவதுடன், 'பீக்ஹவர்ஸில்' நெரிசலும் அதிகரிக்கிறது. தரைப்பாலத்தின் மேல் உடனடியாக தார்சாலை அமைத்து, விபத்து ஏற்படும் வாய்ப்பை தடுக்க வேண்டும் என்பதே, வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பு.