திருப்பூர்:முன் விரோதம் காரணமாக ஏற்பட்ட பிரிவை மறந்து, சமாதானம் செய்ய வந்த நண்பனை கொலை செய்த வாலிபருக்கு திருப்பூர் கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
சாமளாபுரம் அடுத்த இச்சிப்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன் மகன் கார்த்திக்; விசைத்தறி உரிமையாளர். கட்டுச் சேவல் வளர்த்து வந்தார். அவரது சேவல் ஒன்றை கருகம்பாளையத்தைச் சேர்ந்த நண்பர் பிரேம்குமார் எடுத்துச் சென்று விற்பனை செய்துவிட்டார். இதையறிந்த கார்த்திக் கோபத்தில், பிரேம்குமார், அவரது தம்பி நவீன் குமார் இருவரையும் அடித்துள்ளார். இதனால் இரு குடும்பத்திடையே பகைமை ஏற்பட்டது.
இந்நிலையில், கடந்த 2021ம் ஆண்டு டிச.,19ம் தேதி, இரவு கார்த்திக், பிரேம்குமார் வீட்டுக்கு சமாதானம் பேசச் சென்றார். அதை ஏற்றுக் கொள்ளாமல் பிரேம்குமார் அவருடன் தகராறு செய்து கத்தியால் குத்தி கொலை செய்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த மங்கலம் போலீசார் பிரேம்குமாரை கைது செய்தனர்.
இவ்வழக்கு திருப்பூர் முதன்மை மாவட்ட கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் குற்றவியல் வக்கீல் கனகசபாபதி ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி சொர்ணம் நடராஜன், நண்பரைக் கொலை செய்த, பிரேம்குமாருக்கு ஆயுள் தண்டனையும், 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். தீர்ப்புக்குப் பின் பிரேம்குமாரை, 20, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.