உடுமலை:உடுமலை மொடக்குபட்டி கிராமத்தில், ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், திட்ட ஆலோசனை மற்றும் பயனாளிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, ஊராட்சித்தலைவர் மேனகா தலைமை வகித்தார். உதவி வேளாண் அலுவலர் வைரமுத்து முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில், அரசுத்துறைகள் சார்பில், மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து விளக்கமளித்தனர்.
மேலும், குடுமியான்மலை தமிழ்நாடு வேளாண் பல்கலை., மற்றும் வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவ, மாணவியர், தென்னங்கன்று நடவு மற்றும் தேங்காய் உற்பத்தியை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளித்து பேசினர். தொடர்ந்து பயனாளிகளுக்கு, தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.
வி.ஏ.ஓ., மயில்சாமி, வட்டார அணி தலைவர் சந்திரகுமார், கூட்டுறவுத்துறை செயலாளர் முத்துகுமார் மற்றும் கால்நடை டாக்டர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் திட்ட விளக்கமளித்து பேசினர்.