செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், கலெக்டர் ராகுல்நாத் தலைமையில், கலெக்டர் அலுவலகத்தில், நேற்று நடந்தது.
மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல்ராஜ், கூட்டுறவுத்துறை இணை பதிவாளர் தமிழ்செல்வி, வேளாண்மை இணை இயக்குனர் அசோக், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஏழுமலை உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், விவசாயிகள் பேசியதாவது:
செங்கல்பட்டு மாவட்டத்தில், திருக்கழுக்குன்றம், மதுராந்தகம், செய்யூர் ஆகிய தாலுகாக்களில், நெற்பயிர் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. ஒரு ஏக்கர் நெற்பயிர் சாகுபடி செய்ய, 25 ஆயிரம் ரூபாய் செலவாகிறது.
இந்நிலையில், நெல், கரும்பு பயிர்கள் மற்றும் மணிலா, காய்கறி தோட்டம் உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்களை, காட்டுப்பன்றிகள் அழித்து வருகின்றன.
அவற்றை கட்டுப்படுத்த, கடந்த இரண்டு ஆண்டுகளாக, விவசாயிகள் கூட்டத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
மணி, பாலாறு படுகை விவசாய சங்கத் தலைவர்: மாவட்டத்தில், நெல் மற்றும் மணிலா பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த, கடந்த ஐந்தாண்டுகளாக, தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தி வருகிறோம்.
ஆனால், வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். விவசாயிகளை காப்பாற்ற, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கலெக்டர் ராகுல்நாத்: காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த, வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அடுத்த கூட்டத்திற்கு, மாவட்ட வனத்துறை அதிகாரி கண்டிப்பாக வர வேண்டும்.
கிருஷ்ணன், பூதுார் விவசாயி: எல்.என்.புரத்தில், நெற்பயிர்களை நாசப்படுத்திய, 30 மாடுகளை பிடித்து, ஊராட்சி நிர்வாகம், மாடுகளை அடைத்து வைத்திருந்தது. ஊராட்சி செயலர் மற்றும் ஒரு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
ஆனால், மாட்டின் உரிமையாளர், மாடுகளை அவிழ்த்து சென்றுவிட்டார். சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால், விபத்துகள் ஏற்படுகின்றன.
கலெக்டர் ராகுல்நாத்: கொண்டமங்கலம், கேளம்பாக்கம் பகுதிகளில், மாடுகளை அடைக்கும் பவுண்டு உள்ளது. இந்த பவுண்டில், சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை அடைக்க வேண்டும்.
மாடுகளுக்கு அபராதம் விதிக்காமல், பொது ஏலத்தில் விட வேண்டும்.
அடுத்த கூட்டத்தில், மாடுகள் பிடிக்கப்பட்ட விபரங்களை, ஊராட்சி உதவி இயக்குனர்கள் தெரிவிக்க வேண்டும்.
வெங்கடேசன், விவசாயிகள் நல சங்கத் தலைவர்: அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், இடைத்தரகர்கள் இல்லாமல், அதிகாரிகளே முழுமையாக ஈடுபட வேண்டும். கால்நடைகளுக்கு, முறையாக தடுப்பூசி செலுத்தாததால், கோமாரி, அம்மை நோய் பாதிக்கப்பட்டு மாடுகள் இறந்துள்ளன.
கால்நடை உதவி இயக்குனர்: கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
வாசுதேவன், ஓய்வுபெற்ற ஆசிரியர்: ரெட்டிப்பாளையம் ஊராட்சியில், கொளத்தாஞ்சேரியில், பாசன கால்வாயில் ஆக்கிரமிப்பு இருந்ததை, அப்போதைய கோட்டாட்சியர் பன்னீர்செல்வம் அகற்றினார்.
அதன்பின், அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை எடுக்காததால், மீண்டும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
கலெக்டர் ராகுல்நாத்: கொளத்தாஞ்சேரி பகுதியில் ஆய்வு செய்து, மாவட்ட வருவாய் அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, விவாதம் நடந்தது.