திருவொற்றியூர், கலைத் திருவிழா போட்டியில், சென்னை மாநகராட்சி பள்ளி மாணவரான, பீஹார் சிறுவன் பிரகாஷ் குமார் வடிவமைத்த 'கண்ணகி நீதி கேட்டு வழக்குரையாடுதல்' களிமண் சிற்பம், மாநில அளவில் பரிசு பெற்றது.
சென்னை மாநகராட்சி, ராமநாதபுரம் நடுநிலைப் பள்ளியில், 800க்கும் அதிகமான மாணவ, மாணவியர் படிக்கின்றனர். சமீபத்தில், பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடத்தப்பட்ட, கலைத் திருவிழா போட்டியில், இப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள், பல போட்டிகளில் பங்கேற்றனர்.
குறுவட்ட அளவில், 36 தலைப்புகளில் நடத்தப்பட்ட போட்டிகளில், 34ல் பங்கேற்ற மாணவ, மாணவியர், 13 முதலிடங்கள் உட்பட 15 போட்டிகளில் வெற்றி பெற்று, மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்றனர்.
மாவட்ட அளவிலான போட்டியில், ஓவியம் பிரிவில், ஏழாம் வகுப்பு மாணவி சாந்தினி வரைந்த, 'மனதில் பதிந்த இயற்கை காட்சி' என்ற தலைப்பிலான ஓவியம் முதலிடம் பிடித்தது. மாநில அளவில் பரிசு பெற முடியவில்லை.
இப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் பிரகாஷ் குமார் எனும் பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த சிறுவன், குறுவட்ட அளவில், 'திருவள்ளுவர்' சிலையை வடிவமைத்து முதலிடம் பிடித்தார். மாவட்ட அளவிலான போட்டியில், 'அவ்வைக்கு அதியமான் நெல்லிக்கனி வழங்குதல்' நிகழ்வை களிமண் சிற்பமாக செய்து, மாநில போட்டிக்கு முன்னேறினார்.
தொடர்ச்சியாக, 29ம் தேதி, மதுரையில், 6,7,8 ம் வகுப்புகளுக்கான, மாநில அளவிலான போட்டியில், 'கண்ணகி பாண்டிய மன்னனிடம் நீதி கேட்டு வழக்குரையாடுதல்' நிகழ்வை, களிமண் சிற்பமாக வடிவமைத்து, மூன்றாம் பரிசு பெற்றார்.
பீஹாரைச் சேர்ந்த, கூலித் தொழிலாளிகளான தினேஷ் - சுனிதாதேவியின் மகன் பிரகாஷ்குமார், தமிழ் மீதான ஈர்ப்பாலும், ஆசிரியர்களின் அயராது ஊக்குவிப்பாலும், சங்க கால நிகழ்வுகளை, தத்ரூபமாக களிமண் சிற்பமாக செய்து, மாநில அளவில் பரிசு பெற்றதை, பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.