உடுமலை:மாவட்டத்தில் இதுவரை, 7.70 லட்சம் கார்டுதாரர்களுக்கு, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. விடுபட்டோர் இறுதிக்குள் பொங்கல் பரிசு தொகுப்பு பெறலாம்.
தமிழக அரசு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கம் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி வருகிறது.
அரிசி பெறும் கார்டுதாரர் அனைவருக்கும், பரிசு தொகுப்பு ஒதுக்கப்பட்டு, கடந்த 9ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டுவருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் பொங்கலுக்கு முன் வரை, 97 சதவீதம் பேருக்கு, அதாவது 7 லட்சத்து 70 ஆயிரத்து 914 கார்டுதாரர்களுக்கு பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.
விடுபட்டோருக்கு பொங்கலுக்குப்பின் பரிசு தொகுப்பு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, திருப்பூரில் உள்ள ரேஷன்கடைகளில், நேற்றுமுன்தினம் முதல், வழக்கமான குடிமை பொருள் வழங்கலோடு, விடுபட்டோருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுவருகிறது.
கார்டுதாரர்களின் கைரைகை பதிவு செய்யப்பட்டு, பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இம்மாத இறுதிக்குள் விடுபட்ட அனைவருக்கும், தொகுப்பு வழங்கி முடிக்க, ரேஷன் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் இன்னும், 26,130 கார்டுதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்க வேண்டியுள்ளதாக வழங்கல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.