உடுமலை:வலிப்பு வந்து உயிருக்கு போராடியவரை மீட்ட, 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், முதியவரிடம் இருந்த, 8,000 ரூபாய் பணத்தை, நேர்மையுடன் டாக்டர்களிடம் ஒப்படைத்தனர்.
சென்னை, 108 ஆம்புலன்ஸ் உதவி மையத்துக்கு, ஒரு போன் அழைப்பு சென்றுள்ளது. தொடர்பு கொண்டவர், திருப்பூர், பல்லடம் ரோடு, சின்னக்கரை, லட்சுமிநகர் அருகே, முதியவர் ஒருவர் வலிப்பு வந்து மயங்கி, கீழே விழுந்து, சுயநினைவு இல்லாமல் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மங்கலத்தில் இருந்து, 108 ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்கப்பட்டது. 63 வயது மதிக்கத்தக்க முதியவரை மீட்டு, முதலுதவி அளித்து, அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு டிரைவர், டெக்னீசியன் அழைத்துச்சென்றனர். முதியவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுயநினைவு இல்லாமல் மீட்கப்பட்ட முதியவர் பையில், 8,408 ரூபாய் பணம் இருந்தது.
பணியில் இருந்த 108 ஆம்புலன்ஸ் டிரைவர் குணசேகரன், டெக்னீஷியன் கண்ணன் இருவரும் அத்தொகையை, முதியவரிடம் ஒப்படையுங்கள் என, அரசு டாக்டர்களிடம் வழங்கினர். இச்செயலை, அரசு மருத்துவ கல்லுாரி டாக்டர்கள், சக பணியாளர் பாராட்டினர்.