- நமது நிருபர் -
கடன் செயலி வாயிலாக, மோசடி செய்த வழக்கில், நாடு முழுவதும், 200 மோசடி புகார்களில், மொபைல் எண், ஐ.எம்.ஐ., உள்ளிட்ட விபரம் பொருந்துவது தெரிய வந்தது.
இதுதொடர்பாக, மாவட்ட சைபர் கிரைம் போலீசார், டெல்லி போலீசாருடன் இணைந்து தீவிரமாக விசாரிக்கின்றனர்.
திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லுார், பொங்குபாளையத்தை சேர்ந்த, 32 வயது பெண். கடந்த டிச., 15ம் தேதி 'பைசா ஹோம்' கடன் செயலியை பதிவிறக்கம் செய்து, 3 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றார்.
இந்த பணத்தை குறிப்பிட்ட சில நாட்களுக்குள் அப்பெண் செலுத்தினார். தொடர்ந்து, கடன் பெற தகுதியுடையவர் என்று எஸ்.எம்.எஸ்., வந்ததாக இருந்தது.
கடந்த 28ம் தேதி, நான்கு வெளிநாட்டு கடன் செயலி வாயிலாக, 15 ஆயிரம் ரூபாயை கடன் பெற்றார். தவணை காலம் முடியும் முன்னரே பணத்தை திருப்பி செலுத்தக்கூறி, எஸ்.எம்.எஸ்., வந்தது.
தொடர்ந்து, 'வாட்ஸ் அப்' எண்ணுக்கு ஆபாசமான பதிவுகளை அனுப்பி, போட்டோக்களை 'மாப்பிங்' செய்து சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டினர்.
புகார் தொடர்பாக, எஸ்.பி., சஷாங் சாய் உத்தரவின் பேரில், மாவட்ட சைபர் கிரைம் தனிப்படை போலீசார் விசாரித்தனர்.
கேரள கும்பல் கைது
திருப்பூர் மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட காதர்பேட்டை மற்றும் பி.என்., ரோடு புஷ்பா சந்திப்பு அருகே அறை எடுத்து, கால் சென்டர் அமைத்து, 'சிம் பாக்ஸ்'கள் வாயிலாக, குற்ற செயல்களில் ஈடுபட்டது தெரிந்தது.
இது தொடர்பாக, கேரளாவை சேர்ந்த முகமது அஸ்கர், 24, முகமது ஷாபி, 36, முகமது சலீம், 37, அனீஷ் மோன், 33 மற்றும் அஸ்ரப், 46 ஆகியோரை கைது செய்தனர்.
மக்களிடம் இருந்து வரும் அழைப்பு உள்ளிட்டவைகளை மோசடி கும்பல்களுக்கு இணைக்கும் வகையில் வைத்திருந்த, 'ஹைடெக்'கான 11 'சிம் பாக்ஸ்', 500 சிம் கார்டுகள், ஆறு மோடம், மூன்று லேப்டாப், யு.பி.எஸ்., மற்றும் பேட்டரி, 20 ஏ.டி.எம்., கிரெடிட் கார்டுகள், 'யூரோ' டாலர்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
போலீசார் கூறியதாவது:
கடன் செயலி வாயிலாக, போட்டோக்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் என மக்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் ஈடுபட்டுள்ளது.
கேரள கும்பலிடம் கிடைத்த சில தகவல்களின் படி, இக்கும்பல் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் கைவரிசை காட்டியது தெரிய வந்தது.
இதில், ஏராளமான மோசடி நபர்கள் தொடர்பில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இக்கும்பலிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மொபைல் போன் எண், ஐ.எம்.இ., உள்ளிட்ட விபரங்களை, டெல்லியில் உள்ள தேசிய சைபர் கிரைமிடம் ஒப்படைக்கப்பட்டு முதல்கட்டமாக விசாரிக்கப்பட்டது.
அதில், மேற்கொண்ட விபரங்கள், 200 மோசடி புகார்களில் பொருந்துவது தெரிய வந்துள்ளது. தற்போது, இதுதொடர்பாக விசாரணை நடக்கிறது.
இந்த கும்பலுக்கு தலைவனாக செயல்பட்டு வந்த, 'எஸ்.டி.பி.,' என்ற பெயரை கொண்ட கேரள மாநிலத்தை சேர்ந்தவர் என்பது வந்தது.
அவரின் உண்மையான பெயர், முகவரி உள்ளிட்டவை குறித்து விசாரணை நடக்கிறது.
இதுதவிர, இந்த நபர் வாயிலாகவே, திருப்பூர் தேர்ந்தெடுக்கப்பட்டு, 'சிம் பாக்ஸ்', 'சிம் கார்டு' மாற்றுவது உட்பட அனைத்து உத்தரவுகளையும், இக்கும்பல் பெற்று செயல்படுத்தி வந்தனர்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.