தஞ்சாவூர்:திருஆரூரான் சர்க்கரை ஆலையை வாங்கியுள்ள புதிய நிர்வாகம், கரும்பு பதிவு செய்வதற்காக கையெழுத்து வாங்கும் நிலையில், கையெழுத்திடாத ஐந்து விவசாயிகள் மீது பொய் வழக்கு போட்டுள்ளதாக கூறி, விவசாயிகள் ஆர்.டி.ஓ.,வை முற்றுகையிட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், நேற்று ஆர்.டி.ஓ., பூர்ணிமா தலைமையில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது.
அப்போது, திருமண்டங்குடியில் உள்ள திருஆரூரான் தனியார் சர்க்கரை ஆலை விவகாரத்தில், கரும்பு விவசாயிகள் பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி போராட்டம் நடத்தும் நிலையில், புதிய ஆலை நிர்வாகத்திற்கு, கரும்பு பதிவு செய்வதற்காக, சட்டத்துறை கமிஷனர் வழங்கியுள்ள ஆணையை ரத்து செய்ய வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
மேலும், ஆலையின் புதிய நிர்வாகம், கரும்பு பதிவு செய்வதற்காக கையெழுத்து பெற்று வருகின்றனர். கையெழுத்திடாத ஐந்து விவசாயிகள் மீது பொய் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதுபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளும் அதிகாரிகளை கைது செய்ய வேண்டும் எனக் கோரி, ஆர்.டி.ஓ., மேஜை முன், விவசாயிகள் முற்றுகையிட்டு முழக்கமிட்டனர். உடனே, ஆர்.டி.ஓ., பூர்ணிமா, கூட்ட அரங்கத்தில் இருந்து வெளியேறினார். மீண்டும், 10 நிமிடத்துக்கு பின், கூட்டம் தொடர்ந்து நடந்தது.