உடுமலை:உடுமலையில், 48 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் உடுமலை மின் பகிர்மான வட்டம், மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தை, பொள்ளாச்சிக்கு மாற்ற திட்டமிட்டுள்ளதால், தொழில்துறையினர், விவசாயிகள், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
உடுமலை மின் பகிர்மான வட்டத்தில், உடுமலை, அங்கலக்குறிச்சி, பொள்ளாச்சி ஆகிய கோட்டங்கள் உள்ளன. விவசாயம், தொழிற்சாலை, விசைத்தறி, வீட்டு உபயோகம் என, 5.5 லட்சம் மின் இணைப்புகள் உள்ளன.
கடந்த, 1975 செப்., 25ல், கோவை மின் திட்டத்திலிருந்து, பிரிக்கப்பட்டபோது அப்போதைய மக்கள் பிரதிநிதிகளின் கடும் போராட்டத்திற்குப்பின், எலையமுத்துார் பிரிவு பகுதியிலுள்ள, தொழிற்பேட்டையில் துவக்கப்பட்டது.
உடுமலை பகுதி வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருந்த, மின் பகிர்மான வட்டத்திற்கு, திருப்பூர் ரோட்டில், 15 ஏக்கர் பரப்பளவில், 1982ல், அப்போதைய அ.தி.மு.க., அமைச்சர் குழந்தைவேலு, ராமச்சந்திரன் ஆகியோரால், அடிக்கல் நாட்டப்பட்டு, 1989ல், தி.மு.க., ஆட்சிக்காலத்தில், அமைச்சர்கள் சாதிக்பாட்சா, கண்ணப்பன், நேரு ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கோவைக்கு அடுத்த படியாக, பெரிய மின் பகிர்மான வட்டமாகவும், பிரமாண்ட கட்டடங்களுடன், செயற்பொறியாளர் அலுவலகம், மேற்பார்வை பொறியாளர், உதவி பொறியாளர் அலுவலகங்கள் என ஒரே வளாகத்தில் அமைந்துள்ளன.
மேலும், மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்திற்கு எதிரே, பெரிய அளவிலான பண்டக சாலை, மீட்டர் டெஸ்ட்டிங் லேப், டிரான்ஸ்பார்மர் பழுது நீக்கும் மற்றும் பரிசோதனை மையம் மற்றும் இதற்கென தனி செயற்பொறியாளர் அலுவலகம் இயங்கி வருகிறது.
ஏற்கெனவே, திண்டுக்கல் மாவட்டம் பிரிக்கப்பட்டபோது, பழநி பகுதிகள் பிரிக்கப்பட்டும், பல்லடம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் பிரிக்கப்பட்ட போது, தாராபுரம் கோட்டம் என, பெரும்பகுதி எல்லைகள் சுருக்கப்பட்டது.
இந்நிலையில், 50 ஆண்டுக்கும் மேலாக உடுமலையில், செயல்பட்டு வரும், மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தை, பொள்ளாச்சிக்கு இடம் மாற்றம் செய்யவும், இங்கு சொந்த கட்டடத்தில் இயங்கும் அலுவலகத்தை, அங்கு வாடகை கட்டடத்தில் இயங்கும் வகையில் மாற்றவும், 3 மாதத்திற்குள், இப்பணிகளை முடிக்க வேண்டும், என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால், அதிகாரிகள் மட்டுமன்றி, உடுமலை பகுதி மக்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
உடுமலைக்கு பெருமை
பொதுமக்கள் கூறியதாவது:
உடுமலை பகுதியில், நுால் மற்றும் காகித ஆலைகள் என தொழில் வளர்ச்சிக்கும், விவசாயம் மற்றும் நகர வளர்ச்சிக்கும் பெரிதும் துணையாக, மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் அமைந்தது.
அப்போது, தி.மு.க., வில், சாதிக்பாட்சா, கண்ணப்பன் என இரு அமைச்சர்கள் ஆதிக்கம் செலுத்திய நிலையில், பெரும் போராட்டத்திற்கு பின், உடுமலை மின் திட்டம் உருவாக்கப்பட்டு, அன்று முதல் செயல்பட்டு வருகிறது.
மின் இணைப்பு வழங்குதல், புதிய திட்டங்கள் உருவாக்குதல், மின் கம்பம் தயாரிப்பு, மின் மீட்டர்கள், டிரான்ஸ்பார்மர்கள் பராமரிப்பு, பழுது நீக்குதல் என ஏராளமான பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.
உடுமலை மின் பகிர்மான வட்டத்தில், 49 பிரிவு அலுலகங்கள் இருந்தாலும், உடுமலை, மடத்துக்குளம், பெதப்பம்பட்டி, தேவனுார் புதுார் என உடுமலை வருவாய் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளிலேயே, அதிக மின் இணைப்புகள் உள்ளன.
தற்போது, பொள்ளாச்சி கோட்டத்திலுள்ள, பிரிவு அலுவலகங்களை பிரித்து, ஒரு செயற்பொறியாளர் அலுவலகம் கூடுதலாக உருவாக்கவும், கூடுதல் பிரிவு அலுவலகங்கள் உருவாக்க திட்டமிட்டுள்ள நிலையில், உடுமலையில் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் இருப்பதே சரியானதாக இருக்கும்.
ஆனால், தற்போது எந்த விதமான காரணமும் இல்லாமல், சொந்த கட்டத்தில் செயல்படும் ஒரு அலுவலகத்தை, வாடகை கட்டடத்திற்கு மாற்றுவது ஏன், என்ற கேள்வி எழுகிறது.
உடுமலையிலிருந்து மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் மாற்றப்பட்டால், மின் துறை சார்ந்த வளர்ச்சி பாதிப்பதோடு, மின் இணைப்புகள் வழங்குதல் மற்றும் அதிகாரிகள் மீதான புகார்கள் என அனைத்து பணிகளுக்கும் பொள்ளாச்சிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.
இவ்வாறு, பொதுமக்கள் தெரிவித்தனர்.
மின் வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'உயர் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில், மூன்று மாதத்திற்குள், உடுமலை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தை, பொள்ளாச்சிக்கு மாற்றி, பெயர் மாற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அலுவலகத்தை மாற்ற, பொள்ளாச்சியில் இடம் தேர்வு செய்யப்பட்ட பிறகு, பொள்ளாச்சி மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் என அதற்கான உத்தரவு வழங்கப்படும் வாய்ப்புள்ளது,' என்றனர்.