பெலகாவி-“எம்.எல்.ஏ.,க்களின் சிடிக்கள் இருந்தால், ம.ஜ.த., மாநிலத் தலைவர் இப்ராகிம் வெளியிடட்டும்,” என முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி கூறினார்.
'எம்.எல்.ஏ.,க்கள் ௧௭ பேரின் 'சிடி'க்களை வெளியிடுவோம்' என ம.ஜ.த., மாநிலத் தலைவர் இப்ராகிம் கூறி இருந்தார்.
இதற்கு பதிலளித்து பா.ஜ., முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி கூறியதாவது:
ம.ஜ.த., மாநிலத் தலைவர் இப்ராகிம் 'சிடி'க்களை வெளியிடுவதாக கூறி உள்ளார். அவர், 'சிடி'க்களை தன்னிடமே வைத்திருக்கக் கூடாது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் வெளியிட வேண்டும்.
இதுபோல நுாறு சிடிக்கள் வந்தாலும், அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். சிடி தயாரித்து மிரட்டுவோருக்கு மக்கள் உரிய பதிலடி கொடுப்பர்.
காங்கிரசின் மேலவை எதிர்க்கட்சி தலைவர் ஹரிபிரசாத் 17 எம்.எல்.ஏ.க்களை, விபச்சாரிகளுடன் ஒப்பிட்டு பேசி உள்ளார். அவர் அப்படி பேசுபவர் அல்ல. ஏதோ தப்பாக சொல்லியிருக்க வேண்டும். அந்த அறிக்கையை, நான் முழுமையாக பார்க்கவில்லை. ஆனால் எனது நண்பர்கள், இந்த அறிக்கைக்கு பதிலளித்துள்ளனர்.
காங்கிரசிலிருந்து விலகிய எம்.எல்.ஏ.,க்கள், அக்கட்சியில் மீண்டும் இணைவது வரவேற்கத்தக்கது என மாநில தலைவர் சிவகுமார் கூறி உள்ளார்.
மற்றவர்களை பற்றி எனக்குத் தெரியாது. எனக்கு தெரிந்த வரை பா.ஜ.,வை விட்டு யாரும் வெளியேற மாட்டார்கள்.
காங்கிரசின் நிலை என்ன என்பது அனைவருக்கும் தெரியும். அதற்கு எதிர்காலம் இல்லை; இன்னும் 20 ஆண்டுகளுக்கு பா.ஜ.,வை அசைக்க யாருக்கும் சக்தி இல்லை. பா.ஜ.,வால் மாநிலம், நாட்டிற்கு நன்மை.
இவ்வாறு அவர் கூறினார்.