உடுமலை:கணியூர் ஸ்ரீ ஐயப்பன் கோவிலில், மண்டல கால பூஜை நிறைவு விழா நடந்தது.
கணியூர் ஸ்ரீ ஐயப்பன் கோவிலில், மண்டல பூஜை விழா நடந்து வந்தது. நேற்று மண்டல கால பூஜை நிறைவு விழா, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. மூலவரான ஸ்ரீ ஐயப்ப சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் புண்ணிய நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்களாலும், பதினாறு வகையான மூலிகை திரவியங்களாலும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து, மூலவர் மற்றும் பரிவார தெய்வங்கள், கொடிமரம், துளசி மாடம் ஆகியவைகள் பல்வேறு வகையான மலர்களால் அலங்கரிக்கப்பட்டு 'புஷ்பாஞ்சலி' நிகழ்ச்சி நடந்தது.
பல்வேறு வகையான மலர்கள் அலங்காரத்தில், ஸ்ரீ ஐயப்பசுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, கொடியிறக்கப்பட்டு, மண்டல, மகர கால விழா பூஜைகள் நிறைவு பெற்றன. இதனை முன்னிட்டு, கோவிலில் சிறப்பு அன்னதானம் நடந்தது. இதில், கணியூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த நுாற்றுக்கணக்கான பொதுமக்களும், ஐயப்பசுவாமி பக்தர்களும் கலந்து கொண்டனர்.