கோலார்-''காங்கிரஸ் முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக, கோலார் தொகுதியில் போட்டியிடுவேன். இதை தடுக்க யாராலும் முடியாது,'' என பா.ஜ.,வில் சீட் எதிர்பார்க்கும் வர்த்துார் பிரகாஷ் தெரிவித்தார்.
கோலாரில் நேற்று அவர் கூறியதாவது:
கோலார் தொகுதியில், சித்தராமையா போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
அவர் போட்டியிடுவதால், அவர் ஆதரவாளர்கள், மடாதிபதிகளின் நெருக்கடிக்கு பணிந்து, போட்டியில் இருந்து நான் பின்வாங்குவேன்.
ஒருவேளை போட்டியிட்டாலும் பிரசாரத்தில் ஆர்வம் காண்பிக்க மாட்டேன் என்றும், சமூக வலைதளங்களில் வதந்தி பரப்புகின்றனர்.
இதன் மூலம் என்னை அரசியல் ரீதியில் கீழே தள்ளவும், என் கவுரவத்தை குலைக்கவும் முயற்சிக்கின்றனர். இது, வெறும் வதந்தி.
என் மனதை மாற்ற யாராலும் முடியாது. இதற்காக யாரும் முயற்சிக்கவில்லை. நான் 'ஹைவோல்டேஜ்' மின் கம்பி போன்றவன். என்னை திசை திருப்ப அல்லது மனதை மாற்ற முயற்சிக்க வருவோர், எரிந்து சாம்பலாவர்.
'சித்தராமையாவுக்கு எதிராக என்னை போட்டியிட வேண்டாம்' எனக் கூற, குருபர் சமுதாய மடாதிபதிகள் உட்பட யாராலும் முடியாது.
ஜனவரி 9 வரை, சித்தராமையா மீது எனக்கு மதிப்பு இருந்தது. ஆனால் அவருடைய சமுதாயத்தை சேர்ந்த எனக்கு எதிராக, கோலாரில் போட்டியிடுவதாக அவர் அறிவித்த பின், அவர் மீது எனக்கு இருந்த மதிப்பு போய்விட்டது.
ரமேஷ்குமார், அனில் குமார் உட்பட பலரும் சித்தராமையாவை கோலாருக்கு அழைத்து வருகின்றனர். அரசியல் ரீதியில் என்னை ஒழித்து கட்டுவது, அவர்களின் திட்டமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.