பெங்களூரு-பெங்களூரு மத்திய லோக்சபா தொகுதியில், எட்டு சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு எம்.எல்.ஏ.,க்களாக தேர்வாகி இருப்பவர்களும் செல்வாக்குமிக்க தலைவர்களே. கர்நாடகாவின் தலைமை செயலகமான விதான் சவுதா, ராஜ்பவன், உயர் நீதிமன்றம் உட்பட பல வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை உள்ளடக்கியது.
அனைத்து தொகுதிகளிலும் தற்போதைக்கு பா.ஜ., காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகின்றனர். இம்முறை சட்டசபை தேர்தலில் ம.ஜ.த.,வும் தேசிய கட்சியினருக்கு இணையாக போட்டி போடுவதற்கு தயாராகிறது.
அனைத்து மதத்தினரும் ஒற்றுமையுடன் வாழும் அமைதி பூங்காவாக திகழ்கிறது. ஒவ்வொரு தொகுதிக்கும் தனி சிறப்புண்டு. அந்த எட்டு தொகுதிகளின் விபரத்தை பார்ப்போம்.
சர்வக்ஞ நகர்
தொகுதி மறு சீரமைப்புக்கு முன், பாரதி நகராக இருந்து, 2008ல் சர்வக்ஞ நகரானது. 2008, 2013, 2018 என மூன்று சட்டசபை தேர்தல்களிலும், காங்கிரசின் கே.ஜே.ஜார்ஜ் தொடர்ந்து வெற்றி பெற்றவர். மூத்த காங்கிரஸ் தலைவர் என்பதால், இம்முறையும் காங்கிரஸ் டிக்கெட் கிடைப்பது உறுதியாகும். மூன்று முறை அமைச்சராக இருந்தவர். தேர்தல் நெருங்குவதால், தொகுதி முழுதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
சி.வி.ராமன்நகர்
தொகுதி மறு சீரமைப்புக்கு முன், வர்த்துாராக இருந்து, 2008ல் தனி தொகுதியாக சி.வி.ராமன் நகரானது. முன்பு, காங்கிரசின் ஏ.கிருஷ்ணப்பா, அஸ்வத்நாராயண ரெட்டி போன்ற பிரபல தலைவர்கள் ஆதிக்கம் செலுத்தினர். மறு சீரமைப்புக்கு பின், பா.ஜ.,வின் எஸ்.ரகு, மூன்று முறை தொடர்ந்து 'ஹாட்ரிக்' வெற்றி பெற்றுள்ளார். இம்முறையும் பா.ஜ., வேட்பாளர் இவரே என்பது பெரும்பாலும் உறுதி என்பதால், தொகுதி முழுதும் பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்து வருகிறார்.
சிவாஜிநகர்
பெங்களூரின் அரசியல் வரலாற்றில் சிவாஜிநகர் முக்கியமான தொகுதியாகும். ரகுபதி, ஆனந்தகிருஷ்ணா, கட்டா சுப்பிரமணியநாயுடு, ரோஷன்பெய்க் போன்ற தலைவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். 2008, 2013, 2018ல் பொது தேர்தலும்; 2020ல் இடைத்தேர்தலும் நடந்தது.
தற்போது காங்கிரசின் ரிஸ்வான் ஹர்ஷத் எம்.எல்.ஏ.,வாக உள்ளார். இவரே காங்கிரஸ் வேட்பாளர் என்று கருதப்பட்டாலும், பா.ஜ., செல்வாக்கு அதிகரித்துள்ளதை மறுக்க முடியாது என்றே கூறலாம்.
ராஜாஜி நகர்:
ஆரம்பத்தில் ம.ஜ.த., காங்கிரஸ் வெற்றி பெற்றாலும், தொகுதி மறு சீரமைப்புக்கு பின், பா.ஜ., வசம் தான் உள்ளது. தற்போதைய சுரேஷ்குமார் நான்கு முறை வென்று, தொகுதி மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளார். மூன்று முறை அமைச்சராக பணியாற்றியவர்.
மாநிலத்தின் எளிமையான எம்.எல்.ஏ.,க்களில் இவரும் ஒருவர். கட்சியை விட, வேட்பாளருக்கு தான் ராஜாஜி நகரில் முக்கியத்துவம் தரப்படுகிறது.
சாம்ராஜ்பேட்
ஒரு காலத்தில் வாட்டாள் நாகராஜ், பிரபாகரரெட்டி போன்ற கன்னட போராட்டக்காரர்கள் வென்ற தொகுதி. கடந்த 2004ல், முதல்வராக இருந்த காங்கிரசின் எஸ்.எம்.கிருஷ்ணா வென்றார். இவர் பதவியை ராஜினாமா செய்த பின், ம.ஜ.த., காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஜமீர் அகமது கான் நான்கு முறை வென்றார். இம்முறை பா.ஜ., காங்கிரஸ், ம.ஜ.த., மூன்று கட்சியினருமே தீவிர களப்பணி ஆற்றுவதை பார்க்கும் போது போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மஹாதேவபுரா
பன்னாட்டு நிறுவனங்கள் அதிகமாக உள்ள தனி தொகுதியான மஹாதேவபுராவில், தொகுதி மறு சீரமைப்புக்கு பின், மூன்று முறையும் பா.ஜ.,வின் அரவிந்த் லிம்பாவளி ஆதிக்கம் செலுத்துகிறார். நகரின் பெரிய தொகுதிகளில் ஒன்று. மூன்று முறை அமைச்சராக இருந்து, மாநில பா.ஜ., பொது செயலராக பதவி வகித்தவர். காங்கிரஸ் செல்வாக்கு இருந்தாலும், இவருக்கு பதிலடி கொடுக்கும் அளவுக்கு வேட்பாளர் இல்லை என்றே சொல்லலாம். எடியூரப்பா ஆட்சியின் அமைச்சராக இருந்த முல்பாகல் நாகேஷ், இம்முறை காங்கிரஸ் சார்பில் போட்டியிட குதுாகலத்துடன் இருக்கிறார்.
சாந்தி நகர்
தொகுதி மறு சீரமைப்புக்கு முன், பா.ஜ.,வின் ரகு எம்.எல்.ஏ.,வாக இருந்தவர். 2008ல் சி.வி.ராமன்நகர் தொகுதிக்கு சென்றதால், அப்போதில் இருந்து காங்கிரசின் என்.ஏ.ஹாரிஸ் மூன்று முறை வெற்றி பெற்றுள்ளார். இம்முறையும் இவரே காங்கிரஸ் வேட்பாளர் என்று கூறினாலும், பா.ஜ., சார்பில் வாசுதேவமூர்த்தி, கவுதம் குமாரிடையே போட்டி நிலவுகிறது. சாந்திநகரும் பெங்களூரின் முக்கிய தொகுதியாக விளங்குவதால் இம்முறை வெற்றி பெறுவோர் அமைச்சராவது உறுதி என்றே கூறப்படுகிறது.
காந்தி நகர்
இந்த தொகுதியில் 1994ல் அ.தி.மு.க.,வின் பி.முனியப்பா எம்.எல்.ஏ.,வாக பதவி வகித்தார். அதன்பின் நடந்த ஐந்து தேர்தலிலும் காங்கிரசின் தினேஷ் குண்டுராவ் பெரும் ஆதிக்கம் செலுத்துகிறார். மாநில தலைவர், அமைச்சர் என பல பொறுப்புகளை வகித்தவர். தொகுதி மேம்பாட்டில் அக்கறை செலுத்துபவர். ஆறாவது முறையாக களமிறங்குவது உறுதி. பா.ஜ.,வின் சப்தகிரிகவுடாவை இவருக்கு எதிராக களமிறக்க அக்கட்சி யோசிக்கிறது.