சென்னை காணும் பொங்கல் முடிந்த பின், மெரினா கடற்கரையில் தடுப்புகள் அமைக்க 9.89 லட்சம் ரூபாய் மதிப்பில் 'டெண்டர்' கோரிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் போகி, பொங்கல், மாட்டுப்பொங்கலை தொடர்ந்து, மறுநாள் காணும் பொங்கல் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. காணும் பொங்கல் தினத்தன்று, பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்று பொதுமக்கள் குடும்பத்துடன் கொண்டாடி மகிழ்வர்.
சென்னை மாநகரில், மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரைகளில் அதிகளவில் மக்கள் கூடுவர். அதேபோல, இந்தாண்டும் மெரினா, பெசன்ட் நகர், நீலங்கரை, அக்கரை உள்ளிட்ட கடற்கரையில் அதிகளவில் மக்கள் கூடி, காணும் பொங்கல் கொண்டாடட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நேரங்களில் அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக, கடலில் குளிக்க தடை விதிக்கப்படும். மேலும், கடல் பகுதிக்கு செல்ல முடியாதபடி, சென்னை மாநகராட்சி சார்பில் கடற்கரை நெடுகிலும் மரக்கட்டைகளால் தடுப்புகள் அமைக்கப்படும். இந்தாண்டும் மாநகராட்சி தடுப்புகளை அமைத்து, அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுத்தது.
இந்நிலையில், காணும் பொங்கல் 17ம் தேதி முடிந்த நிலையில், 18ம் தேதி சென்னை மாநகராட்சி சார்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது.
அதில், பொங்கல் பண்டிகை முன்னிட்டு, பொதுமக்களின் பாதுகாப்பு காரணங்களுக்கான மெரினா கடற்கரையில் தடுப்புகள் அமைக்க 9.89 லட்சம் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு, டெண்டர் அறிவிக்கப்பட்டது.
பொங்கல் முடிந்தப்பின் டெண்டர் கோரிய சம்பவம், சமூக வலைதளங்களில் சர்ச்சையானது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, நிர்வாக காரணங்களால், டெண்டர் ரத்து செய்யப்படுவதாக சென்னை மாநகராட்சி நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.