பெங்களூரு,-'சாந்தி நகர் சட்டசபை தொகுதியில், போட்டியிடக் கூடாது' என, காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஹாரிஸ் சார்பில் கே.ஏ.எஸ்., அதிகாரி எலிஷா ஆன்ட்ரிவ்ஸ் மிரட்டியதாக, ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
ஆம் ஆத்மி செய்தி தொடர்பாளர் மத்தாயி கூறியதாவது:
எலிஷா ஆன்ட்ரிவ்ஸ் என்ற கே.ஏ.எஸ்., அதிகாரி, ஜனவரி 13ல், காலை 9:00 மணியளவில் மொபைல் போனில் என்னை தொடர்பு கொண்டார். 15 நிமிடம் பேசிய அவர், சாந்தி நகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஹாரிஸ் பெயரை பலமுறை குறிப்பிட்டார்.
இந்த தொகுதியில் நீங்கள் போட்டியிடக் கூடாது. இதற்கு சம்மதிக்கா விட்டால், தொந்தரவை அனுபவிக்க நேரிடும் என மிரட்டினார்.
தேர்தல் தோல்வி பயத்தால், அதிகாரி மூலம் எம்.எல்.ஏ., ஹாரிஸ், என்னை மிரட்டியது துரதிர்ஷ்டவசம். கர்நாடக அரசு மற்றும் இந்திய தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி, அரசு அதிகாரிகள் எந்த கட்சிக்கு ஆதரவாகவும், தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்பது சட்டப்படி குற்றமாகும். எலிஷா ஆன்ட்ரிவிடம் விசாரணை நடத்தி, கடுமையாக தண்டிக்க வேண்டும் என, அரசு தலைமை செயலரிடம் புகார் அளித்துள்ளோம்.
இத்தகைய வெத்து மிரட்டலுக்கு பணிந்து, தேர்தலில் இருந்து பின்வாங்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை. என் மொத்த வாழ்க்கையையும், ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு அர்ப்பணித்துள்ளேன். இதே கொள்கை கொண்ட ஆம் ஆத்மி சார்பில், நான் களமிறங்குவது உறுதி.
சாந்தி நகர் சட்டசபை தொகுதியில், அரசு பள்ளிகள், அரசு மருத்துவமனைகளின் வளர்ச்சிக்காக, எம்.எல்.ஏ., ஹாரிஸ் எதையும் செய்யவில்லை. அரசு வீட்டுமனைகள், பூங்காக்களை ஆக்கிரமித்துள்ள எம்.எல்.ஏ., இவற்றை ரியல் எஸ்டேட்டாக மாற்றியுள்ளார்.
டான்ஸ் பார்கள், சாந்தி நகரின் அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்துகின்றன. போதைப் பொருட்களால் இளைஞர்களின் ஆரோக்கியம் பாழாகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.