உடுமலை;உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டங்களிலுள்ள, 54 ஆயிரத்து, 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
ஆற்றின் வழியோர கிராமங்களுக்கு, குடிநீர் மற்றும் நிலத்தடி நீர்மட்ட ஆதாரமாகவும் உள்ளது.
நடப்பு ஆண்டில், தென் மேற்கு பருவ மழை காலத்தில், ஜூலை, 15ல், அமராவதி அணை நிரம்பியது. அப்போது, தொடர்ந்து, 3 மாதத்திற்கும் மேலாக, அணையிலிருந்து உபரி நீர் ஆறு மற்றும் பிரதான கால்வாயில் திறக்கப்பட்டது.
அதோடு, அணையிலிருந்து, பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களில் சாகுபடிக்காக தொடர்ந்து நீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வட கிழக்கு பருவ மழை துவங்கி, அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்ததால், நவ., 11ல் அணை மீண்டும் நிரம்பியது.
தொடர்ந்து, அணைக்கு நீர்வரத்தும், வெளியேற்றமும் சீராக பராமரிக்கப்பட்டு வந்தது. இதனால், கடந்த ஆறு மாதமாக, அணை நீர்மட்டம் மொத்தமுள்ள, 90 அடியில், 85 அடிக்கு மேல் காணப்பட்டது. மழை காலங்களில், 89.50 அடி நீர் இருப்பும், உபரி நீர் திறப்பு என அணை நிலவரம் இருந்தது.
இந்நிலையில், வட கிழக்கு பருவ மழை காலம் நிறைவு பெற்று, அணைக்கு நீர்வரத்து குறைந்தது.
அணையிலிருந்து, பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு தொடர்ந்து நீர் வழங்கப்பட்டு வருவதால், அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
நேற்று காலை நிலவரப்படி, அமராவதி அணை நீர்மட்டம் மொத்தமுள்ள, 90 அடியில், 80.94 அடியாகவும், மொத்த கொள்ளளவான, 4,047 மில்லியன் கனஅடியில், 3,253.81 மில்லியன் கனஅடி நீர் இருப்பு இருந்தது.
அணைக்கு வினாடிக்கு, 108 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையிலிருந்து, ஆற்று மதகு வழியாக, 400 கனஅடி நீரும், கல்லாபுரம், ராமகுளம் கால்வாயில், 50 கனஅடி நீரும், பிரதான கால்வாயில், 440 கனஅடி நீர், இழப்பு, 19 என, 890 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது.