- நமது நிருபர் -
ஒருங்கிணைந்த குடியிருப்புகள் மற்றும் அப்பார்ட்மென்ட்களில், போர்வெல்கள் இயக்குவதற்கு பயன்படுத்தும் மோட்டார்களுக்கு தனி மின் இணைப்பு பெற்றுள்ளனர். இதுவரை, இந்த மின் இணைப்புகளுக்கு, 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. இந்நடைமுறையை மின் வாரியம் மாற்றியுள்ளது.
புதிய நடைமுறையில், 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டு, மின் இணைப்பு வகை மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இதில், வணிக ரீதியான கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்போர் கூறுகையில், 'மின் கட்டணத்தில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளனர்.
ஒருங்கிணைந்த குடியிருப்புகளில் பயன்படுத்தும் போர்வெல்களுக்கான மின் இணைப்புக்கு வகை மாற்றம் செய்வது தேவையற்றது. தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யவே போர்வெல் பயன்படுத்தப்படுகிறது. இதற்கான கட்டணத்தை வணிக ரீதியான வகைப்பாட்டுக்கு மாற்றியிருப்பது நியாயமற்றது' என்றனர்.
மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ''போர்வெல்களுக்கான மின் இணைப்புகள், '1டி' ஆக வகை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பலருக்கும் நோட்டீஸ் வினியோகித்துள்ளோம். வீட்டு மின் இணைப்பில் உள்ள போர்வெல்களுக்கு வீட்டு மின் கட்டணமே வசூலிக்கப்படுகிறது.
வரிசையாக வீடுகள் உள்ள ஒருங்கிணைந்த குடியிருப்புகள், அப்பார்ட்மென்ட்களில் பயன்படுத்தும் பொது போர்வெல்களில் உள்ள தனி மின் இணைப்புக்கு மட்டும், '1டி' வகை மாற்றம் செய்யப்பட்டு, வணிக ரீதியான கட்டணம் வசூலிக்கப்படுகிறது,'' என்றார்.