பல்லடம்:பல்லடத்தில் நடந்த வெறி நோய் தடுப்பூசி முகாமில், ஆர்வம் குறைவு காரணமாக, குறைந்த அளவிலான நாய்களே அழைத்து வரப்பட்டன.
திருப்பூர் மாவட்ட கால்நடை துறை சார்பில், வெறி நோய் தடுப்பூசி விழிப்புணர்வு முகாம், பல்லடம் அரசு கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்தது.
நகராட்சி தலைவர் கவிதாமணி தலைமை வகித்து துவக்கி வைத்தார். இணை இயக்குனர் குமாரரத்தினம் முன்னிலை வகித்தார். நாய்களைத் தாக்கும் வெறிநோயை தடுப்பதற்காக, இலவச தடுப்பூசி வழங்கப்பட்டது. வெறிநோய் குறித்த விளக்கங்கள், பிராணிகள் நலம், இறைச்சிக் கூடங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் உள்ளிட்டவை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தடுப்பூசி முகாம் நடப்பது குறித்து, பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை. மேலும், பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் சென்ற பலர் இன்னும் திரும்பவில்லை. நேற்று விடுமுறை நாள் இல்லை என்பதாலும், பெரும்பாலானவர்கள் வேலைக்கு சென்று விட்டதாலும், தடுப்பூசி முகாமில் பங்கேற்க இயலவில்லை. இது போன்ற சிறப்பு முகாம்கள் நடத்தும் போது, விடுமுறை தினங்களில் நடத்துவதுடன், பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதும் அவசியம்.