மேடவாக்கம், மேடவாக்கம் ஊராட்சி, நான்காவது வார்டுக்கு உட்பட்ட ஜெயா நகரில் 400 வீடுகள் உள்ளன. 1,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
மற்ற தெருக்களைவிட தாழ்வான இடத்தில் ஜெயா நகர் அமைந்திருப்பதால், சிறு மழை பெய்தாலும், தண்ணீர் தேங்கி, வற்றுவதற்கு ஒரு மாதமாகிறது. மேலும், வடிகால் வசதி இல்லாததால், இங்குள்ள தெருக்களில், ஆண்டு முழுதும் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. துர்நாற்றம் வீசி, கொசு பெருக்கம் அதிகமாகிறது.
இதனால், ஆண்டு முழுக்க கொசுக் கடியால் அவதியுறும் மக்கள், பலவித நோய்களுக்கு ஆளாக நேரிடுகிறது. இப்பகுதி மக்கள் கூறியதாவது:
மழை நீர் வடிகால் அமைத்தால், தெருக்களில் தேங்கும் நீர், வடிகால் வழியாக அருகிலுள்ள ஏரிக்கு சென்றுவிடும். இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம், 10 ஆண்டுகளுக்கும் மேலாக முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், இது குறித்து ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.